`வழக்கு விசாரணையில் அமைச்சர், டிஜிபி தலையீடு!' - நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் | Pon Manickavel files defamation case against TN chief secretary and others

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (10/06/2019)

கடைசி தொடர்பு:19:00 (10/06/2019)

`வழக்கு விசாரணையில் அமைச்சர், டிஜிபி தலையீடு!' - நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல்

தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அமைச்சர் ஒருவரும் டிஜிபி-யும் வழக்கு விசாரணையில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவமதிப்பு வழக்கு

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017-ம் ஆண்டு ஜூலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேலை நியமித்து, அவருக்குத் தேவையான காவலர்கள், உள்கட்டமைப்பு, வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். பின்னர், சிலை கடத்தல் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு அந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்த நிலையில், 2018 நவம்பர் 30-ம் தேதி, பொன்.மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

பொன்மாணிக்கவேல்

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தேவையான வசதிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனுத்தாக்கல் செய்துள்ளார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்குக்கான மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில்,  ஓர் அமைச்சரும் டிஜிபி-யும் விசாரணையில் தலையிடுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட 4 வழக்குகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுகிறார். இந்த வழக்குகளில் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிலைதடுப்பு

``2017-ம் ஆண்டு உத்தரவுபடி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பல மாவட்டங்களின் வழக்குகள் மாற்றப்படவில்லை.  43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளன.  3 லட்சம் சிலைகள் தொடர்பான ஆய்வுகள் செய்யவேண்டிய நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கான வசதிகள் செய்துகொடுக்கவில்லை. தற்போதைய குழுவில் 21 பெண் காவலர்கள் பணியில் இருந்தும், அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாததால் அவதிப்படுகின்றனர்.  சிறப்புப் பிரிவு தேவைப்படும் 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்கான வாகன வசதி, உள்கட்டமைப்பு வசதி என எதுவும் செய்து கொடுக்காமல், தொடர்ந்து அவமதிப்பில் ஈடுபடுகின்றனர்” என்று  குறிப்பிட்டுள்ளார். 

 ஐ.ஜி-யாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பேற்றது முதல் தான் சிறப்பாகப் பணியாற்றுவதைத் தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் தொடர்ந்து அவமதித்து வருவதால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.