`3 தலைவர்களின் சிலை திறப்பு; வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்!' - திருச்சியில் முகாமிட்ட ஸ்டாலின் | MK Stalin unveils 3 leaders statue in Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (10/06/2019)

கடைசி தொடர்பு:19:57 (10/06/2019)

`3 தலைவர்களின் சிலை திறப்பு; வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்!' - திருச்சியில் முகாமிட்ட ஸ்டாலின்

ஸ்டாலின்
 
தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத்திய மண்டலத்தில் வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி எம்.பி-க்கள் சகிதமாக  மேடை ஏறுகிறார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழா
 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம்மூலம் திருச்சி வந்த ஸ்டாலின், திருச்சி லால்குடியை அடுத்துள்ள அன்பில் கிராமத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பேரன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ சொந்தச் செலவில் சீரமைக்கப்பட்ட வெண்கலச்சிலையை திறந்துவைத்தார்.
பின்னர் அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எம்.பி-க்கள் திருச்சி சிவா,திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், சௌந்திரபாண்டியன் ஆகியோர் சகிதமாக நூற்றாண்டு மலரை வெளியிட்டார்.
திமுக தொண்டர்கள் வரவேற்பு
நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ``அன்பில் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்த அன்பில் தர்மலிங்கத்தின் சிலையைத் திறந்துவைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பில் தர்மலிங்கம், தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரிடமும் மிகவும் அன்பாகப் பழகக்கூடிய பண்பாளராக விளங்கியவர். கலைஞருக்கு பெருமைசேர்த்த அன்பிலாரின் அயராத உழைப்பை என்னால் மறக்க முடியாது. திருச்சி மாவட்டம் தீரர்களின் மாவட்டம் மட்டுமல்லாமல், தி.மு.க தொண்டர்கள் நிறைந்த மாவட்டமாக உருவாக்கியவர் அன்பிலார்.  
 
அவர் வழிநின்று நாமும் கடமையாற்றிட உறுதி ஏற்போம். நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதைப் போலவே,  வருகின்றன சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெற சபதம் ஏற்போம். அதற்கேற்ப கடமையாற்றி உழைப்போம்'' என்று முடித்தார்.
திருச்சி
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளைத் திறந்துவைத்தார். பின்னர், தி.மு.க சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த விழாவிற்காக திருச்சி மாநகரம் முழுக்க தி.மு.க கொடி மற்றும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், திருவிழாக் கோலமாய் திருச்சி காட்சியளிக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதால், அவரது பேச்சைக் கேட்க  தி.மு.க தொண்டர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.