`குடித்தனம் இருக்க முடியலை!' - டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் | Women staged protest in Pudukottai over closure of TASMAC shop

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/06/2019)

கடைசி தொடர்பு:20:02 (10/06/2019)

`குடித்தனம் இருக்க முடியலை!' - டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அந்தப் பகுதி பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில், கடந்த 3மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை மற்றும் பார் புதிதாகத் திறக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில்தான், 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுசேர்ந்து, டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி, வடக்கு ராஜ வீதி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சார்லஸ் மற்றும் டவுன் போலீஸார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறியதையடுத்து, பெண்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். பெண்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், இந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேசினோம், ``3 மாசத்துக்கு முன்னால மதுக்கடை திறக்கும்போதே போராட்டம் செஞ்சோம். போலீஸ்காரங்க, `டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்குறோம்'னு சொன்னாங்க. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பேர் குடியிருக்கிறோம். இரவு நேரத்துல சிலர் வீட்டு வாசல்ல எல்லாம் உட்கார்ந்து மது குடிக்கிறாங்க. குடிச்சிட்டு அவங்களுக்குள்ள ரகளையிலும் ஈடுபடுறாங்க. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய சிரமா இருக்கு. குடித்தனம் இருக்க முடியலை. எனவே, இங்க உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.