`போட்டோ எடுத்ததும் திரும்பி வாங்கிட்டாங்க!' - கோவை மாணவர்களின் லேப்டாப் புகார் | Coimbatore Students complaint over Free laptop

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (10/06/2019)

கடைசி தொடர்பு:21:20 (10/06/2019)

`போட்டோ எடுத்ததும் திரும்பி வாங்கிட்டாங்க!' - கோவை மாணவர்களின் லேப்டாப் புகார்

கோவையில், மாணவர்களுக்கு வழங்கிய இலவச லேப்டாப்களை, மீண்டும் வாங்கிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

லேப்டாப் வழங்கிய நிகழ்ச்சி

கோவை ஒண்டிப்புதூர்ப் பகுதியில் கதிரி மில்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இது அரசு உதவிபெறும் பள்ளி என்பதால் மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2017-18 ம் கல்வி ஆண்டில் இங்கு 188 பேர் 12-ம் வகுப்பு படித்து முடித்தனர். அந்த மாணவர்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் லேப்டாப் வழங்கப்பட்டது. சூலூர் எம்.எல்.ஏ-வாக இருந்த கனகராஜ் (மறைந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ) தலைமையில் விழா நடத்தப்பட்டது. இதற்காக பேனர் எல்லாம் வைத்து தடபுடல் ஏற்பாடுகள் செய்தாலும், 10 பேருக்கு மட்டுமே லேப்டாப்களை வழங்கியுள்ளனர். அதையும் போட்டோ எடுத்துவிட்டுத் திரும்பப் பெற்றுவிட்டதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள், ``அ.தி.மு.க-வினர் ஏதோ சம்பிரதாயத்துக்காக லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். தற்போதுவரை எங்களுக்கு லேப்டாப் வந்து சேரவில்லை. மற்ற பள்ளிகளில் எல்லாம் லேப்டாப் வழங்கிவிட்டனர். அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலும் கிடைப்பதில்லை. அந்த லேப்டாப் எங்கே போனது என்றே தெரியவில்லை” என்றனர்.

புகார்

தங்களுக்கு லேப்டாப் வழங்காத பள்ளி நிர்வாகத்தைக் கலாய்க்கும் விதமாக, மாணவர்கள் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களை உருவாக்கிப் போட்டு வருகின்றனர். லேப்டாப் வழங்காததைக் கண்டித்து, கதிரி மில்ஸ் பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்கள், கோவை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியரிடமும் அவர்கள் மனு அளித்தனர்.