ஒயர்கள் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி; கருகிய கரும்புத் தோட்டம்! ரூ.1.75 லட்சம் நஷ்டமடைந்த விவசாயி | Tindivanam former loses sugarcane to fire accident

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/06/2019)

கடைசி தொடர்பு:21:41 (10/06/2019)

ஒயர்கள் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி; கருகிய கரும்புத் தோட்டம்! ரூ.1.75 லட்சம் நஷ்டமடைந்த விவசாயி

நாம் வாங்கும் எந்த ஒரு விலை உயர்ந்த பொருளும் வீணாகிவிட்டால், நம் மனம் எவ்வளவு கவலைகொள்ளும் என்பது, நாம் அனைவரும் உணர்ந்ததே. அதுபோல திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் கரும்பு விவசாயிக்கு நடந்த சம்பவம், கேட்போரை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

கரும்பு

திண்டிவனம் அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எடப்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 2 ஏக்கர் 80 சென்ட் பரப்பளவிலான ஒன்றரை வருடகால கரும்பு, மின்கம்பியில் ஏற்பட்ட கசிவால் முற்றிலும் தீயில் எரிந்து கருகிவிட்டது.

இதுதொடர்பாக நில உரிமையாளர் நாராயணனிடம் பேசினோம். ``நான் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை விவசாயம் செய்தேன். அப்புறம் வயதானதால் நிலத்தை குத்தகைக்குக் கொடுத்துவருகிறேன். அதேபோல, குத்தகைக்கு நிலத்தைப் பெற்று, இப்போதுதான் ஆலகிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் கரும்பு பயிரிட்டிருந்தார். பாவம் சில நாளைக்கு முன்னால் மொத்த கரும்பும் நெருப்பில் எரிந்துவிட்டது. அவரிடம் பேசுங்கள்" என்று தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

ஐயப்பனிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``தோட்டத்துல ஒன்றரை வருஷமா விளைஞ்ச கரும்பு வெட்டுற பக்குவத்துல இருந்துச்சு. சில நாள்களுக்கு முன்னாடி, மதிய நேரத்துல நல்ல காத்து அடிச்சது. அப்போ, தோட்டத்து வழியா போற மின் கம்பிகள்  உரசி தீப்பொறி கொட்டியிருக்கு. அதுல மொத்த தோட்டமும் எரிஞ்சிடுச்சு. மனசுக்கு ஒரே கஷ்டமா போச்சு .மொத்தம் 2 ஏக்கர் 80 சென்ட் கரும்பு. இதுவரை 1.75 லட்சம் வரை செலவு செஞ்சுருக்கேன். அதுல 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கித்தான் பார்த்து வந்தேன். இந்த மாதிரி நடந்ததுக்கு நான் யாரைக் குறைகூற முடியும். வெட்டுற பக்குவத்துல இருந்தபோதே ஆலையில் அனுமதி கொடுத்திருந்தா இந்த நிலை வந்திருக்காது. 

கரும்பு

நிலமும் எனது சொந்த நிலம் இல்ல. விவசாயம் செய்ய ஆசைப்பட்டு ஒருத்தரிடம் குத்தகை முறையில நிலம் வாங்கித்தான் விவசாயம் செஞ்சேன். ஒவ்வொரு வருஷமும் இந்த நில உரிமையாளருக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் தரணும். எனக்கு இப்போ என்ன செய்றதுன்னே தெரியலை. கூட்டுறவு வங்கியில இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க. நடக்குமான்னு தெரியலை. யார்கிட்டயும் நான் முறையிடல”என்றார் வருத்தத்தோடு.