`அவர் குடும்பம் நிர்க்கதியாய் நிற்கிறது; அரசு உதவ வேண்டும்!' - தஞ்சை சமூக ஆர்வலருக்காகத் திரண்ட மக்கள் | People seeks government help to tanjore activist anand babu's family

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/06/2019)

கடைசி தொடர்பு:08:16 (11/06/2019)

`அவர் குடும்பம் நிர்க்கதியாய் நிற்கிறது; அரசு உதவ வேண்டும்!' - தஞ்சை சமூக ஆர்வலருக்காகத் திரண்ட மக்கள்

தண்ணீர் பிரச்னையில் அடித்துக் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்தை வறுமையில் இருந்து காக்க அரசு உதவ வேண்டும் என்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டு, தஞ்சை கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

ஆனந்த் பாபு

தஞ்சாவூர் அருகே உள்ள விளார் வடக்கு காலனியைச் சேர்ந்தவர், ஆனந்தபாபு. இவர், சமூக சேவைகளை அதிக ஈடுபாட்டுடன் செய்து வந்தார். குறிப்பாக, மழைநீர் சேகரிப்பு, எய்ட்ஸ், மது ஒழிப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவந்தார். மேலும், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பல்வேறு செயல்களைச் செய்துவந்தார். இந்த நிலையில், தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஆனந்த்பாபுவின் குடும்பம் வாழ்கை நடத்துவதற்கு எந்த வழியும் இல்லாமல் தவித்து வருகிறது.

மனு கொடுத்த மக்கள்

திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு மகள்,உடல் நிலை முடியாமல் அசைவற்றுக் கிடக்கும் இன்னொரு மகளுடைய மகள் எனப் பல பேரை கரை சேர்க்கவேண்டிய பொறுப்பைத் தாங்கியபடி ஆனந்த்பாபுவின் தந்தை கலங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களது குடும்பம் ஆனந்த்பாபுவின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது. இந்த நிலையில், அவரின் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஆனந்த்பாபுவின் தங்கைக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து,  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, ஆனந்த்பாபுவின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என தஞ்சை கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், முதல்வர் சிறப்பு நிதியில் இருந்து அந்தக் குடும்பத்துக்குவேண்டிய நிதி உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனந்த் பாபு

இதுகுறித்து மனு கொடுக்கச் சென்றவர்களிடம் பேசினோம். ``ஆனந்த்பாபு, தன் குடும்பத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என போராடவில்லை; எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனப் போராடினார். இயற்கையிலேயே உதவும் குணம்கொண்ட ஆனந்த்பாபு, சமூக சேவைகளில் அக்கறையோடு செயல்பட்டு, எளிய மக்களுக்கான உதவிகளை செய்துவந்தார். இந்த நிலையில், ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் இல்லாமல் அந்தக் குடும்பம் தவிப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. இதனால், ஆனந்த்பாபு குடும்பதிற்கு உதவிசெய்யுங்கள் எனக் கூறி, அந்த பகுதி மக்கள், நண்பர்கள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தோம். 

எல்லாவற்றையும் பார்த்த கலெக்டர், `பிரச்னை நடப்பதை முன்கூட்டியே தெரிவித்திருக்கலாமே?' என அக்கறையோடு கேட்டார். `பாவிகள், இப்படிச் செய்வார்கள் என நாங்கள் நினைக்கவில்லை' எனக் கூறிவிட்டு, சமூகப் பணிகளைச் செய்யும்போது உங்களுடன் நின்றே பத்து போட்டோவிற்கு மேல் அவர் எடுத்திருக்கிறார் சார்' என குறிப்பிட்டுச் சொன்னோம். `அரசு வேலை வழங்குவது என்பது சாத்தியமில்லை. ஆனால், முதல்வர் நிதியில் இருந்து உதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்' எனக் கூறி  நம்பிக்கையூட்டினார். இது எங்களுக்கு ஆறுதலான விஷயம் என்றாலும் சமூகப் பணிகளைச் செய்து எல்லோராலும் அறியப்பட்ட ஒருவரின் குடும்பமே இன்று வாழ வழியில்லாமல் நிர்கதியாய் நிற்கிறது. வறுமையில் இருந்து காக்க கலெக்டருடைய நிதியில் இருந்தே அவர் உடனே கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், முதல்வர் நிதியில் இருந்து பெற்றுத் தருகிறேன் என்று கூறுவது கொஞ்சம் ஏமாற்றம்தான். எங்களைப் போன்றவர்கள் சின்னச்சின்ன உதவிகள்தான் அவர்களுக்கு செய்ய முடியும். ஆனால், அரசு நினைத்தால் அந்தக் குடும்பத்தில் உடனே மறுமலர்ச்சி கொண்டுவர முடியும்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க