விவசாயி இப்படிதான் செயல்படுவாரா… எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்! | Will the farmer act like this? mk stalin questioned against edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (11/06/2019)

கடைசி தொடர்பு:10:51 (11/06/2019)

விவசாயி இப்படிதான் செயல்படுவாரா… எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்!

விவசாயி இப்படிதான் செயல்படுவாரா எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மற்றும் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று இரவு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின்

முன்னதாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், மாவட்ட தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சிலைகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி-க்கள் திருநாவுக்கரசர், திருச்சி சிவா, எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் சகிதமாக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடுத்து பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளர் காதர்முகைதீன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், மத்திய மண்டலத்தில் வெற்றிபெற்ற 6 எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய பாரிவேந்தர், ``தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக தண்ணீர் பஞ்சம் நிற்கிறது. என்னை வெற்றிபெற வைத்த பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு நன்றி கூறச் சென்றபோது, முசிறி அருகில் என்னை மக்கள் சூழ்ந்துகொண்டு தண்ணீர் பிரச்னையை தீர்த்துவிட்டுச் செல்லுங்கள் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சொந்தச் செலவில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் போர்வெல் அமைத்து தந்துள்ளேன். இதேபோல் பெரம்பலூர் பகுதிகளில் வாகனம் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். அரசு செய்யத் தவறினாலும், என்னை வெற்றி பெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கு நான் சுயமாக செய்வேன்” என்றார்.

ஸ்டாலின்

மேடையில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``அறிஞர் அண்ணா, கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோருக்கு இன்று ஒரே நேரத்தில் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. கருணாநிதி இல்லாத முதல் பிறந்தநாள் விழா இது. ஆனால், அவர்தான் நம்மை இயக்குகிறார். அவரிடம் பெற்ற பயிற்சியால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதைப்போன்ற வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பெறுவதற்கு சபதம் ஏற்க வேண்டும். அந்த வெற்றியையும் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்துவதுதான் எனது உறுதியான எண்ணம்.

நாம் எதைச் செய்தாலும் குறை சொல்வதற்கு என்று குருவிக் கூட்டம் ஒன்று உள்ளது. அந்தக் கூட்டம் இப்போது, ``நாம் பொய்ப் பிரசாரம் செய்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி வருகிறது. அப்படியானால் மோடி வெற்றி பெற்றிருக்கிறாரே? அவர் செய்த பொய்ப் பிரசாரத்தை நம்பி ஓட்டு போட  தமிழக மக்கள் முட்டாள் இல்லை. வெற்றிபெற்றுள்ள 38 எம்.பி-க்கள் நாடாளுமன்றம் கூடும்போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப்  பொறுத்திருந்து பாருங்கள். அவர்கள் கடந்த முறை இருந்த 39 பேரைப் போல் கூனிக்குறுகி ஜடம் மாதிரி இருக்க மாட்டார்கள். அண்ணா சொன்னதைப்போல, ``உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” நாடாளுமன்றம் கூறுவதற்கு முன்பே, இந்தித் திணிப்பு என்கிற நச்சுப் பாம்பை அடித்து விரட்டியுள்ளோம். இந்தி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்க, தி.மு.க காட்டிய எதிர்ப்புதான் காரணம். பி.ஜே.பி  தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்தால் என்ன நடக்கும் என்பதை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளனர்.

5 மாதங்களுக்கு முன்பு கூட்ட வேண்டிய காவிரி ஆணையக் கூட்டம், சமீபத்தில்தான் கூடியது. தமிழகத்துக்கு உரியத் தண்ணீர் வருகிறதா, அதைக் கர்நாடகம் தருகிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் ஆணையத்தின் பணி. அதைவிடுத்து ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டூ அணை கட்டுவது குறித்துப் பேசுகிறார்கள். அது காவிரி ஆணையமா அல்லது கர்நாடகா ஆணையமா? தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது. மேக்கே தாட்டூவில் அணை கட்டுவோம் எனக் கர்நாடக மாநில அமைச்சர் பேசுகிறார். அதை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வழிமொழிந்து பேசுகிறார். அப்படியானால் மத்திய மாநில அரசுகள் தமிழினத் துரோகிகள் இல்லையா?

ஸ்டாலின்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 5 இடங்களில் பா.ஜ.க ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதற்கு இதுதான் காரணம். அதற்குப் பிறகும் கூடப் புத்தி வரவில்லையே. 8-வது ஆண்டாகக் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கவில்லை. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வர் அல்லது அமைச்சருடன் பேசினாரா. எட்டு வழிச் சாலையில் முதல்வர் காட்டும் அவசரமும் ஆர்வமும், காவிரி பிரச்னையில் வெளிப்படுத்தவில்லை. காரணம் எட்டு வழிச் சாலை அமைந்தால் 3,000 கோடி கமிஷன் வரும். காவிரி தண்ணீர் வந்தால் கமிஷன் வருமா. லாபத்தை அடிப்படையாக வைத்துதான்  எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சமாதானம் செய்து எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கொண்டுவருகிறேன் என்கிறார். இந்த லட்சணத்தில் நானும் ஒரு விவசாயி என அவர் கூறுகிறார். விவசாயிகள் எதிர்ப்பை மீறிச் செயல்படுவதுதான் விவசாயி வேலையா?

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 1-2ம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அமைப்பு சார்பில் நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் பங்கேற்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் எட்டு வழிச் சாலை பிரச்னையில் எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்த யதேச்சாதிகார கூட்டணி அரசுக்கு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் கொடுத்த மரண அடி, இதோடு நிறுத்தாமல் இன்னொரு மரண அடியைச் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தரவேண்டும். நீட் தேர்வுக்கு பலிபீடமாகத் தமிழகம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இரண்டு மாணவிகள், தற்போது 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள்தான் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம். இப்படி இப்படிப்பட்ட கொலைபாதக அரசுக்கு முடிவு கட்ட தயாராகுங்கள். தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்” என முடித்தார்.