சென்னை விரிவாக்கத்தில் அழியாமல் காக்கப்பட்ட காடு! - மரக்கன்றுகளை வளர்க்கும் வனத்துறை | tambaram forest department tree planting work

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (11/06/2019)

கடைசி தொடர்பு:12:00 (11/06/2019)

சென்னை விரிவாக்கத்தில் அழியாமல் காக்கப்பட்ட காடு! - மரக்கன்றுகளை வளர்க்கும் வனத்துறை

சென்னையில் வேளச்சேரி - தாம்பரம் இடையே உள்ள மேடவாக்கத்தில் தாம்பரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, நன்மங்கலம் வனப்பகுதி. நன்மங்கலம் வனப் பகுதியின் மொத்த பரப்பளவு 2,400 ஹெக்டேர் ஆகும். இதில் 320 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். பறவை ஆராய்ச்சி ஆர்வலர்களிடையே பரவலாக அறியப்பட்ட, இந்தக் காடு 85-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் புகலிடமாகவும் மரங்கள் அதிகமாகக் கொண்டும் விளங்குகிறது. மேலும், பல அரிய வகைப் பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன. 

மரக்கன்றுகள்

நன்மங்கலம் கிராமம், நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைக்கும் இடையில் ஒரு புதுவித வாழ்க்கை மேற்கொள்கிறது. வனத்துறையின் கட்டுப்பாடுகளால்தான் இன்னும் அந்தக் காடு ஓரளவு பிழைத்திருக்கிறது. இன்னும் அப்பார்ட்மென்ட்டுகள், ஐ.டி பார்க்குகள், தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வனப்பகுதியில் சிறிது நிலம், அருகிலுள்ள கல்லூரிக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக் கல்லூரி 10.33 ஏக்கர் நிலத்தை உபயோகப்படுத்திவிட்டு, மீதம் இருந்த நிலத்தைத் தரிசாக வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அந்த நிலத்தை மீட்டது, வனத்துறை. மீட்ட நிலம் தரிசாக இருந்ததால் அதில் மரக்கன்றுகள் வளர்க்கத் திட்டமிட்டு, மரக்கன்றுகளை வாங்கும் பணி ஆரம்பித்தது. 

மரக்கன்றுகள்

புகைப்படங்கள் - எம்.சி.நந்தகுமார்

தாம்பரம் வனச்சரக அதிகாரிகள் நாட்டு மரக்கன்றுகள் வாங்க திட்டமிட்டு, வேப்ப மரம், வாகை, நாவல், அழிஞ்சில், புங்கம், மருது, தான்றி, வேங்கை, நெல்லி, ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 300 வகையான மரக்கன்றுகள் தேர்வு செய்து நட்டு வைத்திருக்கின்றனர். கோடைக்காலங்களிலும் நாட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தாக்குப்பிடித்து நிற்கின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் தண்ணீர் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை விரிவாக்கத்தில் அழியாமல் காக்கப்பட்ட காடுகளில் நன்மங்கலம் காடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.