``விதிகளை மீறிய லோக் ஆயுக்தா குழுவை நீக்க வேண்டும்!'' - வழக்கறிஞர் பி.ஸ்டாலின் | High Court petition filed against Tamilnadu Lokayukta

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (11/06/2019)

கடைசி தொடர்பு:16:51 (11/06/2019)

``விதிகளை மீறிய லோக் ஆயுக்தா குழுவை நீக்க வேண்டும்!'' - வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

இந்த நியமனத்தை ரத்துசெய்து சட்டவிதிகளின்படி முறையான லோக் ஆயுக்தா குழுவைத் தேர்வுசெய்து நியமிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இதில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், உறுப்பினர்களையும் வழக்கில் சேர்க்கச் சொல்லி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

``விதிகளை மீறிய லோக் ஆயுக்தா குழுவை நீக்க வேண்டும்!'' - வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

``விதிகளை மீறி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்'' என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்டுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சம்பந்தப்பட்டவர்களையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து அவர்களும் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வழிசெய்யும் லோக் ஆயுக்தா சட்டம் 1969-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தற்போது 16 மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இதை நடைமுறைக்குக் கொண்டுவராமல் இருந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதற்கிடையே, `எந்தக் காரணமும் சொல்லாமல் லோக் ஆயுக்தாவை அமைக்காத மாநிலங்கள் உடனே அமைக்க வேண்டும்' எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு மட்டும் காலம் தாழ்த்தி வந்து கடும் கண்டனத்துக்கு ஆளானது.

லோக் ஆயுக்தா குழு குறித்து ஸ்டாலின்

இந்த நிலையில், கடந்த வருடம் லோக்பால் மசோதாவைத் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியபோது அதிகாரமில்லாத லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் உட்பட பலரை ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்க முடியாது என்று கூறி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி தேவதாஸும், இவருக்குக் கீழே நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள். `எதிர்க்கட்சித் தலைவரிடம் ஆலோசிக்காமல் விதிகளை மீறி நியமிக்கப்பட்ட இக்குழுவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று தி.மு.க உட்பட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இடையில் தேர்தல் வந்துவிட்டதால் இப்பிரச்னை அமுங்கிப்போனது.

இந்த நிலையில்தான் தமிழக அரசு நியமித்த லோக் ஆயுக்தா குழுவை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கைத் தாக்கல் செய்தவரும், `லோக்ஆயுக்தா அமைக்க வேண்டும்' என நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் வழக்கறிஞருமான பி.ஸ்டாலினிடம் பேசினோம், ''லோக் ஆயுக்தா உறுப்பினர்களை அதற்கான தேர்வுக்குழுதான் தேர்ந்தெடுக்க வேண்டும். முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். இம்மூன்று பேர் இல்லாமல் தேர்வு செய்யக் கூடாது. டிசம்பர் மாதம் நடந்த லோக் ஆயுக்தா தலைவர் உறுப்பினர் தேர்வு செய்யும் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அவர் இல்லாமலே தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வுசெய்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளனர். முறைகேடுகளை விசாரிக்க அமைக்கும் அமைப்பைத் தேர்வு செய்யும் விதமே இப்படி விதிகளை மீறியிருந்தால், அது எப்படி முறையாகச் செயல்பட முடியும்? அதனால், இந்த நியமனத்தை ரத்துசெய்து சட்டவிதிகளின்படி முறையான லோக் ஆயுக்தா குழுவைத் தேர்வுசெய்து நியமிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இதில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், உறுப்பினர்களையும் வழக்கில் சேர்க்கச் சொல்லி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வரும் 24-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது'' என்றார்.

"நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதில் தி.மு.க. தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது எனக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சரியோ, தவறோ லோக் ஆயுக்தா குழுவைத் தேர்வு செய்வதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் பங்களிப்பைச் செய்திருக்க வேண்டும். ஆனால், நாளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தாவால் சிக்கல் வரும் என்று நினைத்துதான் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்