ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆஜரான வைகோ…வழக்கிலிருந்து விலகிய நீதிபதி..! | Madras HC Judge Sasitharan opts out from sterlite case

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/06/2019)

கடைசி தொடர்பு:15:00 (11/06/2019)

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆஜரான வைகோ…வழக்கிலிருந்து விலகிய நீதிபதி..!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதால் அந்த ஆலையை உடனடியாக மூடக்கோரி, பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டத்தில் பங்கெடுத்த 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் `மீண்டும் ஆலையத் திறக்க அனுமதி வழங்க வேண்டும்' எனப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

வேதாந்தா நிறுவனத்துக்குச் சாதகமாக பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது, இந்த வழக்கில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன்பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்குத் தடை விதித்தும், வேதாந்தா நிறுவனம் வேண்டுமென்றால் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” என்றும் தீர்ப்பு வழங்கினர்.

ஸ்டெர்லைட் வழக்கில் வைகோ

அதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மீதான தடையை விலக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி சத்தியநாராயணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு சென்றுவிட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வின் கீழ் பட்டியலிடப்பட்டது.

வேதாந்தா நிறுவனம்

இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜரானார். ஆனால், 'இந்த வழக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரித்து விட்டதால், இதை விசாரிப்பதில் தனக்கு விருப்பமில்லை' எனக்கூறி நீதிபதி சசிதரன், வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். மேலும் 'புதிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றவேண்டும்' என்று அவர் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரையும் செய்துள்ளார். இந்தநிலையில் வேறு அமர்வுக்கு வழக்கை மாற்றக்கோரும் பரிந்துரையை தலைமை நீதிபதி பரிசீலனைக்கு எடுத்த பிறகே, அது எந்த நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு வரும் என்று தெரியவரும். அதுதொடர்பான முடிவு இன்று மாலை தெரியவரும்.