ஆட்சியைத் தக்கவைத்தது எப்படி?- அமைச்சர் உதயகுமார் சொல்லும் புள்ளி விவரக் கணக்கு | Minister R.B.Udhayakumar speaks on admk issues

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (11/06/2019)

கடைசி தொடர்பு:15:31 (11/06/2019)

ஆட்சியைத் தக்கவைத்தது எப்படி?- அமைச்சர் உதயகுமார் சொல்லும் புள்ளி விவரக் கணக்கு

``நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா இல்லாமலேயே நாங்கள் 38.5 சதவிகித வாக்குகள் பெற்றதே பெரிய சாதனை" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.

அமைச்சர் உதயகுமார்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``மூத்த அமைச்சர்களாக இருக்கக்கூடிய தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து இந்த ஆட்சிக்கான அங்கீகாரமாக மக்களுடைய அங்கீகாரத்தை பெறுகிற வகையிலே 38.2 வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறோம். ஜெயலலிதா உயிரைக்கொடுத்து உருவாக்கிய இந்த அரசை முதல்வரும், துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் கட்டிக் காப்பாற்றியேதே மிகப்பெரிய சாதனை. நாங்கள்தான் அ.தி.மு.க என்று சொன்னவர்கள் இன்று 5.5 சதவிகித வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால், 2016-ல் ஜெயலலிதா ஆட்சி அமைக்கிறபோது 41 சதவிகிதத்தில் இருந்தது. இன்று நாங்கள் 38 சதவிகிதமாக இருக்கிறோம். வெறும் 3 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதை ஒப்பிட்டுப் பார்ப்போமானால் ஆட்சி பொறுப்பேற்று, தலைமை பொறுப்பேற்று இந்த ஒன்றரை ஆண்டில் அதாவது குறுகிய காலத்துக்குள்ளே மக்களுடைய நம்பிக்கையும் ஜெயலலிதாவின் செல்வாக்கையும் காப்பாற்றி எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முறியடித்து, மதிநுட்பத்தோடு செயல்பட்டு, ஒரு எளிய முதல்வராக ஒரு சாமானிய முதல்வராக இன்றைக்கு செயல்பட்டு இந்த சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ்

41 சதவிகித வாக்குகளில்தான் நாங்கள் ஆட்சியை அமைத்தோம். இப்போது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டிருப்பது 38.2 சதவிகிதம். ஆகவே 3 சதவிகிதம் என்பது நமக்கு மிகப்பெரிய பின்னடைவு அல்ல. அதை சரி செய்ய முடியாதது அல்ல. அதை நிச்சமாக சரி செய்ய முடியும். மக்கள் நம்பிக்கையைப் பெறமுடியும். முதல்வரின் சாதனையை, ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுகிற அந்த செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு போகிறபோது மீண்டும் ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொன்னதைப்போல தொடர்ந்து அ.தி.மு.க அரசுதான் இருக்கும். நம்பிக்கையை ஏற்படுத்துகிற இந்தப் புள்ளி விவரங்களை ஊடகங்கள் மறைத்து ஏதோ தோல்வி அடைந்ததாகவும் மீட்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறுகின்றன.

ஒன்றே ஒன்று மட்டும் நான் கூறுகிறேன். 1989-ல் அ.தி.மு.க பிளவுபட்டபோதுகூட அன்றைக்கு இரட்டைப் புறாவுக்கு வெறும் 15 சதவிகிதம் கிடைத்தது. ஜெயலலிதா தலைமை தாங்கிய சேவல் சின்னத்துக்கு 27 சதவிகிதம் கிடைத்தது. ஆனால், இன்றைக்கு பிரிவு என்று அவர்கள் சொன்னாலும் இரட்டை இலைச் சின்னத்தை, ஜெயலலிதாவின் லட்சியத்தை முன்னிறுத்தி நாங்கள் இன்றைக்கு 38.2 சதவிகிதம் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் எந்தக் குழப்பமுமில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். தொண்டர்கள் முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார்கள். ஜெயலலிதா இல்லாமலேயே இந்த சாதனையைப் படைக்க முடிந்ததே பெரிய சாதனை. இதை உங்கள் (பத்திரிகையாளர்கள்) மூலமாக தெரியப்படுத்த விரும்புகிறேன். மிகத் தெளிவான மகத்தான வெற்றி. அ.தி.மு.க என்கிற அங்கீகாரம் இந்தத் தேர்தல் மூலமாக பெற்றிருக்கிறோம். ஆட்சித் தொடர வேண்டும் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்.

சென்னையில் உதயகுமார் பேட்டி

எங்களுக்கு வெற்றியா தோல்வியா என்று முதல்வர் பிரசாரத்தில் சொன்னது நடந்திருக்கிறது. பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னார். இரண்டும் நடந்திருக்கிறது. கர்மவீரர் காமராஜருக்குப் பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆசியோடு ஒரு சாமானிய முதல்வராக பழனிசாமி இருக்கிறார்" என்றார்.

இந்தத் தேர்தலில் நாங்கள் 38.5 சதவிகித வாக்குகள் பெற்றிருப்பதாக அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கும் நிலையில், அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்குகள் 30.28 சதவிகிதம்தான் என்றும் அ.தி.மு.க மட்டும் 18.48 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.