சென்னையில் முகாமிட்டு ஆலோசனை; ராஜன் செல்லப்பாவின் திட்டம் என்ன? | The reason behind Rajan Chellapa's camp in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (11/06/2019)

கடைசி தொடர்பு:19:13 (11/06/2019)

சென்னையில் முகாமிட்டு ஆலோசனை; ராஜன் செல்லப்பாவின் திட்டம் என்ன?

சென்னையில் முகாமிட்டு ஆலோசனை; ராஜன் செல்லப்பாவின் திட்டம் என்ன?

`இரட்டைத் தலைமை கூடாது' என்ற விவகாரம் அ.தி.மு.க-வில் பரபரப்பாக எழுந்துள்ள நிலையில், சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.கவில் `ஒற்றைத் தலைமை'க்காக குரல் எழுப்பிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையில் முகாமிட்டுள்ளார். அவருடன் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் பலரும் தொடர்புகொண்டு பேசி வருவதாக வெளியாகும் தகவல்கள், ஓ.பி.எஸ் தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல மக்களை ஈர்க்கக் கூடிய அதிகாரமிக்க ஒற்றைத் தலைமைதான் வேண்டும். இரட்டைத் தலைமையால் தேர்தலில் பெரும் தோல்வி ஏற்பட்டது; தொண்டர்களுக்கும், தலைமைக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது" என்று மதுரையில் கடந்த 8-ம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்து, அ.தி.மு.க.வில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கருத்தை குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் ஆதரித்துப் பேச, கட்சி ரொம்பவும் கலகலத்தது.  

ராஜன் செல்லப்பா

`பொதுவெளியில் கட்சி நிர்வாகிகள் கருத்துகளைக் கூறவேண்டாம்' என்று கட்சியின் தலைமைக்கழகத்திருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ராஜன் செல்லப்பா. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்குக் கறி விருந்து அளிக்கப்பட்டது.  ஆனால், இந்தக் கூட்டத்தில் `எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து சிறப்பாகச் செயலாற்றுகிறார்கள்' என்று ஏற்கெனவே பேசிய கருத்திலிருந்து சற்றே டெம்போவை குறைத்துப் பேசினார் அவர். `கட்சியில் கட்டுப்பாடு என்பது அமைச்சர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொருந்தும்' என்றவர், `கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உரிய பதவி, மரியாதை அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வேறு கட்சிக்கோ, அமைப்புகளுக்கோ  சென்று விடுவார்கள்' என்று பொடிவைத்துப் பேசினார்.

இதன்மூலம் `முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த தன் மகன் ராஜ்சத்யனுக்கு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கச் சொல்கிறார் போல' என்று கட்சியினர் பேச ஆரம்பித்தார்கள். இதற்கிடையே ராஜ்சத்யன், கடந்த 9-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருப்பதும் கட்சியினருக்குச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இதுவரை தன் தந்தையின் கருத்தில் தனக்கு உடன்பாடா, இல்லையா என்பது பற்றி ராஜ்சத்யன் எதுவும் தெரிவிக்கவில்லை. ராஜன்செல்லப்பாவுக்கு அமைச்சர் பதவி அல்லது ராஜ் சத்யனுக்கு எம்.பி பதவி கொடுப்பது பற்றி எடப்பாடி ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள் சில அ.தி.மு.கவினர்.

மதுரை ஆலோசனைக் கூட்டம்

`எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரைச் சுற்றியுள்ள கொங்கு லாபியின் எண்ணப்படிதான், ராஜன்செல்லப்பா பேசிவருகிறார். ஜூன் 12 -ம் தேதி நடைபெறும் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அதற்கான விடை தெரியும்' என்று சொல்லப்படும் நிலையில், ராஜன் செல்லப்பா ஏற்கெனவே சென்னைக்கு வந்துவிட்டார். ``தன் ஆதரவாளர்களுடன் தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அவரைப் பல முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து வருகிறார்கள். ஓ.பி.எஸ் மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் சிலரும், சில மாவட்டச் செயலாளர்களும் ராஜன் செல்லப்பாவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். `பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது?' என்ற கேள்வி அ.தி.மு.க கூட்டத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகக் கேட்கப்படும். அதிலிருந்து பல பிரச்னைகளுக்கு முடிவு தெரியும்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

``மொத்தத்தில் ஓ.பி.எஸ்ஸின் அதிகாரத்தைக் குறைக்கவும், அவரைத் தனிமைப்படுத்தவும்தான் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்படுகிறது; இல்லையென்றால், இவ்வளவு நாளாகக் கூட்டப்படாத கட்சிக் கூட்டத்தை ராஜன் செல்லப்பா குரல் எழுப்பியதும், உடனே அறிவிப்பார்களா?" என்றும் சொல்கிறார்கள்.

``மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து வருவதாகச் சொல்கிறார்களே உண்மையா?'' என்று சென்னையிலிருக்கும் ராஜன் செல்லப்பாவிடம் கேட்டதற்கு, ``அதெல்லாம் இல்லை; நான் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறேன். அவ்வளவுதான்.'' என்றார் சுருக்கமாக.

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் முடிவடையும்வரை திக்...திக்....தான்....! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்