``நீட் தற்கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” - செங்கோட்டையன் பதில் | Education minister sengottaiyan answers on neet suicides in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (11/06/2019)

கடைசி தொடர்பு:17:28 (11/06/2019)

``நீட் தற்கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” - செங்கோட்டையன் பதில்

``அரசுப் பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்துவதன்மூலம் தொடரும் நீட் தற்கொலை எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும்" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் நீட்

பாலினச் சிறுபான்மையினர்கள் கல்விக்கூடங்களில் சந்திக்கும் துன்புறுத்தல்கள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வறிக்கையை வெளியிட யுனேஸ்கோ அமைப்பின் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான இயக்குநர் எரிக் ஃபால்ட் அதைப் பெற்றுக்கொண்டார். ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி சில திட்டங்கள் ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் இன்னும் முழுமையான திட்டச்செயல்பாடுகள் விரைவில் நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பிரதீப் யாதவ் தெரிவித்தார். நிகழ்வு முடிந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அமைச்சர்.

``தொடரும் நீட் தற்கொலைகளைத் தடுக்க பள்ளிக்கல்வித் துறை அளவில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?” எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ``மாணவர்கள் தோல்வியைக் கண்டு பயப்படுகிறார்கள். அதை  எதிர்கொள்ளும் மனநிலை அவர்களிடம் இல்லை. கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவதால் விளையாட்டில் அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.  விளையாட்டு அதிகரிப்பதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசுப் பள்ளிகளில் விளையாட்டைக் கட்டாயமாக்கவும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் விளையாட்டுத் துறையில் தற்போது கூடுதலாக இரண்டு உறுப்பினர்களைச்  சேர்த்திருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் விளையாட்டை மேம்படுத்துவதன் மூலம் இந்தத் தற்கொலை எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தார். மேலும், அரசுப் பள்ளிகளில் யோகாவைக் கொண்டுவருவதற்கான திட்டநடைமுறைகளும் செயல்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க