சரத்குமார், ராதாரவி மீது நிலமோசடிப் புகாரில் காஞ்சிபுரம் குற்றப்பிரிவில் விஷால் ஆஜர்! | south Indian artists association land problem

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (11/06/2019)

கடைசி தொடர்பு:17:55 (11/06/2019)

சரத்குமார், ராதாரவி மீது நிலமோசடிப் புகாரில் காஞ்சிபுரம் குற்றப்பிரிவில் விஷால் ஆஜர்!

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 28 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட நான்கு பேர் முறைகேடாக விற்பனை செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் விஷால் புகார் அளித்திருந்தார்.

விஷால், காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை வேறு ஏஜென்சியின் விசாரணைக்கு மாற்றவும் முறையான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவும் உத்தரவிடக் கோரி நடிகர் சங்கத்தின் பொதுச்செயலர் விஷால், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, புகார்குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த விசாரணையை காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்றும், நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்யும்படி நடிகர் விஷாலுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து, விசாரணைக்குரிய ஆவணங்களை விஷால் தரப்பினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், சில மாதங்களுக்கு முன்பு ராதாரவி, சரத்குமார் ஆகியோர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர்கள் இதுவரை ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த நடிகர் விஷால், இன்று காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்துவரும் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராமமூர்த்தி பயிற்சிக்காக வெளியூர் சென்றிருப்பதால், மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசு, இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.