சாத்தூர் இடைத்தேர்தலில் தோல்வி ஏன்?- கே.கே.எஸ்.எஸ்.ஆர். அடுக்கும் 3 காரணங்கள் | Former minister Ramachandran Upset on Sattur BY Election lose

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (11/06/2019)

கடைசி தொடர்பு:18:10 (11/06/2019)

சாத்தூர் இடைத்தேர்தலில் தோல்வி ஏன்?- கே.கே.எஸ்.எஸ்.ஆர். அடுக்கும் 3 காரணங்கள்

சாத்தூர்

`அதீத நம்பிக்கையாலும் அஜாக்கிரதையாலுமே சாத்தூர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்தோம்'' என முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். எனவே, கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.

சாத்தூர் இடைத்தேர்தல் குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  பேச்சு

இந்தக் கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறும்போது, “நாம் தேர்தலுக்காக மட்டும் கூட்டணி அமைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே அனைத்து பிரச்னைகளுக்கும் எதிராக இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளோம். எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்த 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றிபெற்றோம். அதேநேரத்தில், சாத்தூர் தொகுதியில் மிகக் குறைவாக 456 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தோம். அங்குள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தற்போது வாங்கியதைவிட 2 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தால், நாம் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கலாம்.

கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான நன்றி அறிவிப்பு கூட்டம்

ஆனால், நிச்சயம் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையாலும் நம்முடைய அஜாக்கிரதையாலும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை நம்பியதால், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தோல்வியடைந்தோம். ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு சாத்தூர் இடைத்தேர்தலே நமக்கு நல்ல எடுத்துக்காட்டு'' என்று தெரிவித்தார்.

மாணிக்கம்தாகூர்

மாணிக்கம்தாகூர் பேசும்போது, “கடந்த தேர்தலை ஒப்பிட்டுப்பார்த்தால், அ.தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 5,60,000 வாக்குகள் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், மக்களின் மனநிலை வேறு. மக்களின் மனநிலையைப் புரிந்துவைத்து செயல்பட்டதால் நாம் வெற்றி பெற்றோம். விருதுநகர் மக்களவையில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் விரைவில் எம்.பி அலுவலகம் திறக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். என்னால் முடிந்த அனைத்துப் பணிகளையும் செய்வேன்'' என்று தெரிவித்தார்.


அதிகம் படித்தவை