`செந்தில் பாலாஜி ஏன் வழக்கை சந்திக்கக் கூடாது?’ - சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி | Madras hc questioned against senthil balaji

வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (11/06/2019)

கடைசி தொடர்பு:18:16 (11/06/2019)

`செந்தில் பாலாஜி ஏன் வழக்கை சந்திக்கக் கூடாது?’ - சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி

'போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றசாட்டில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முகாந்திரம் உள்ள நிலையில், ஏன் வழக்கை சந்திக்கக் கூடாது' என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க ஆட்சியில், கடந்த 2011-2015 காலகட்டத்தில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அவர், அரசு  போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி கணேஷ்குமார் என்பவர் 30 பேரின் பணத்தைச்சேர்ந்து  95 லட்சத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் வேலை வாங்கித்தரவில்லை என்று கூறி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில்  கடந்த 2016-ம் ஆண்டு கணேஷ் மத்திய குற்றபிரிவில் புகார் கொடுத்தார்.

செந்தில் பாலாஜி

அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மற்றும் சகாயராஜ், பிரபு உள்ளிட்ட 4 பேர் மீது 2017-ம் ஆண்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  ‘‘ அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு என்மீது போடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

 இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``குற்றம் நடைபெற்றதாகக் கூறப்பட்ட 2014 - 2015 காலகட்டத்திலிருந்து 2 ஆண்டுகள் கடந்தே புகார் அளிக்கபட்டுள்ளது.  இந்தப் புகார், ஜோடிக்கப்பட்ட ஒன்று. பணத்தை செந்தில்பாலாஜி எந்த இடத்திலும் நேரடியாக வாங்கவில்லை. புகார் அளித்த நபர், பின் வாசல் வழியாகப் பணி நியமனம் பெற முயன்றுள்ளார். அதுகுறித்து காவல்துறை விசாரிக்கவில்லை” என்று தெரிவித்தார். 

அப்போது நீதிபதி, `` குற்றச்சாட்டு குறித்த முகாந்திரம் உள்ள நிலையில் விசாரணையை சந்திக்க மாட்டரா...” எனக் கேள்வி எழுப்பினார்.  ``தற்போது, விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை வரும் 18-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.