ரயில்கள் ஏன் தாமதமாக வருகின்றன? - தென்னக ரயில்வேயின் ஆச்சர்ய விளக்கம் | southern railway about train late

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (11/06/2019)

கடைசி தொடர்பு:18:50 (11/06/2019)

ரயில்கள் ஏன் தாமதமாக வருகின்றன? - தென்னக ரயில்வேயின் ஆச்சர்ய விளக்கம்

தென்னக ரயில்வேயின் கீழ் கிட்டத்தட்ட 1305 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 652 மின்சார ரயில்களும் இயங்கிவருகின்றன. நாளொன்றுக்கு 2.41 மில்லியன் பயணிகள் இந்த ரயில்களைப் பயன்படுத்திவருகின்றனர். எலெக்ட்ரிக் மற்றும்  விரைவு ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமீபத்தில் அதிகம் எழுகின்றன. இந்நிலையில், ஆபத்தான  நேரத்தில் எச்சரிக்கை செய்வதற்காக  வைக்கப்பட்டுள்ள  சங்கிலிகளைத்  தேவையில்லாமல் பயணிகள் அடிக்கடி இழுப்பதனால்தான் ரயில்கள்  தாமதமாகின்றன எனக் காரணம் சொல்கிறது தென்னக ரயில்வே.

ரயில்வே

இதுகுறித்து தென்னக ரயில்வே  அறிக்கை ஒன்றைத் தம் இணையதளத்தில் வெளியிட்டது. அதில், “ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டுதான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருந்த போதிலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக உள்ள சங்கிலிகளைத் தேவையில்லாமல் அதிகம் இழுக்கப்படுவதுதான் ரயில்கள் தாமதத்திற்குக் காரணமாகிறது. ரயில்களின் சிக்னல்கள் தானியங்கி முறையில் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு ரயில் கால தாமதத்தால், அந்த ரயிலில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதன்பின் அந்தப் பாதையில் பயணிக்க உள்ள ரயில்களுக்கும் கால தாமதத்தை ஏற்படுத்தும். பயணிகள் ரயில்களைத் தவறவிடுதல், மின் விசிறிகள் சரியாக இயங்கவில்லை, ரயில் பெட்டியில் தண்ணீர் வரவில்லை என இதுபோன்ற சிறிய காரணங்களுக்காக எல்லாம் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், இது மாதிரி சுமார்  775 சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் மட்டும், கிட்டத்தட்ட 3.72 லட்சம் ரூபாய் தண்டனைத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.