`இப்படியொரு புரளியை யார் கிளப்பிவிட்டார்கள்!' - கீழடி ஆய்வுப்பணிகுறித்து பாண்டியராஜன் பதில் | TN Minister Pandiarajan explains about keezhadi excavation

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/06/2019)

கடைசி தொடர்பு:19:20 (11/06/2019)

`இப்படியொரு புரளியை யார் கிளப்பிவிட்டார்கள்!' - கீழடி ஆய்வுப்பணிகுறித்து பாண்டியராஜன் பதில்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கும் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பிரச்னையால், கீழடியில் தொடங்கப்படவிருந்த 5-ம் கட்ட ஆய்வுப்பணி ரத்துசெய்யப்பட்டுள்ளது என்கிற தகவல், தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழடி ஆய்வு பணிகள்


சிவகங்கை மாவட்டம் கீழடியில், சங்க காலத் தமிழர்களின் நகர நாகரிகம்குறித்த அகழாய்வுப் பணி, 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி,  கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற அகழாய்வுப்பணியில், ஐந்து தொல்லியலாளர்கள் ஈடுபட்டனர். ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜனவரியில் பணி தொடங்கப்படவில்லை.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன்

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், “கீழடியைப் பொறுத்தவரை இதுவரை 14,500 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் கட்ட ஆய்வுக்காக தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 10 தொல்லியல் அறிஞர்கள் அங்கு ஆய்வுசெய்ய உள்ளனர். புதன் கிழமை (ஜூன் 12-ம் தேதி) அகழாய்வுப் பணியைத் தொடங்கவிருக்கிறோம்” என்று கூறினார்.

இதற்கிடையில், கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணி ரத்துசெய்யப்பட்டிருப்பதாக இன்று காலையில் வெளியான தகவல் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக அமைச்சர் கே.பாண்டியராஜனிடம் கேட்டபோது, “கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கான நிதியெல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணியைத் தொடங்குகிறோம். தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளைக்கு நான் கீழடிக்குச் செல்கிறேன். இதற்கிடையில், இப்படியொரு புரளியை யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை” என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க