``என் பேரன் என்னைப் பார்க்க நிச்சயம் வருவான்!'' - கால்வாயிலிருந்து குழந்தையை எடுத்த கீதா | "Suthanthiram will come and visit me...'' says Geetha who rescued the kid from drainage

வெளியிடப்பட்ட நேரம்: 09:12 (12/06/2019)

கடைசி தொடர்பு:10:43 (12/06/2019)

``என் பேரன் என்னைப் பார்க்க நிச்சயம் வருவான்!'' - கால்வாயிலிருந்து குழந்தையை எடுத்த கீதா

"என் பேரன் என் கண்ணுக்குள்ளவே இருக்கான். இதுநாள் வரைக்கும் அவனைப் பார்க்கணும்னு தோணுச்சுன்னா ஓடிப்போய் பார்த்துடுவேன். இப்போ அப்படிப் பார்க்க முடியாதே..."

டந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வளசரவாக்கத்திலுள்ள மழைநீர்க் கால்வாயில் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தைதான் சுதந்திரம். சுதந்திரத்தை நம்மில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சுதந்திரத்தின் புன்னகையைச் சேமித்ததில் கீதாவின் பங்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

சுதந்திரத்தை மீட்ட கீதாவுடன் சுதந்திரம்

பிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தன் வீட்டு மழைநீர்க் கால்வாயில் கிடப்பதைப் பார்த்த கீதா அந்தக் குழந்தையைப் போராடி மீட்டார். சுதந்திர தினத்தன்று பிறந்ததால் `சுதந்திரம்' எனப் பெயர் சூட்டினார். சுதந்திரம் கால்வாயில் நீண்ட நேரம் கிடந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுதந்திரத்தை மீட்ட கீதாவிற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. கீதாவிற்கும், சுதந்திரத்திற்கும் இடையிலான அன்பு அத்தனை அழகானது. சுதந்திரத்தைப் பிரிய மனமில்லாமல் அவரைத் தத்தெடுக்க கீதா விரும்பினார். ஆனாலும், அரசாங்க விதிமுறையின் காரணமாக சுதந்திரத்தை அவரால் தத்தெடுக்க முடியவில்லை. இதற்கிடையில் உடல் நலம் தேறிய சுதந்திரம் அண்ணா நகரில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்துக்கு மாற்றப்பட்டார். குழந்தை தத்து கொடுக்கப்பட்டு வெகு நாள்கள் ஆகிவிட்ட நிலையில் கீதா எப்படியிருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினேன்.

``அவனை மருத்துவமனையில சேர்த்ததுக்கு அப்புறம் பார்க்கணும்னு தோணுறப்ப எல்லாம் உடனே, அங்கே போய் பார்த்திடுவேன். ஒருவேளை அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்கன்னா உடனே போய் அவனைப் பார்த்துட்டு அவன் கூடவே இருப்பேன். அவன் என் பேரன். எங்க வீட்டுல என் பொண்ணு படம் மாட்டியிருக்கிறதுக்கு நடுவுல பெருசா என் பேரன் சுதந்திரத்தோட படத்தை ஃப்ரேம் போட்டு மாட்டி வெச்சிருக்கேன் என்றவரிடம் தத்து கொடுக்கப்பட்டதற்குப் பிறகு குழந்தையைப் பார்த்தீர்களா என்றேன்.

சுதந்திரம்

``ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி சுதந்திரத்தை ஒருத்தங்க தத்தெடுத்துக்கப் போறதா என்கிட்ட சொன்னாங்க. மனசு பரிதவிச்சு அவனைப் பார்க்க ஓடினேன். அவனை எப்போ பார்க்கப் போனாலும் அவனோடு சேர்த்து அங்கே இருக்கிற குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிட்டுப் போவேன். இந்த முறையும் எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட் வாங்கிட்டுப் போனேன். சுதந்திரத்துக்கு ஷூ, டிரெஸ்னு வாங்கிட்டுப் போயிருந்தேன். எப்போ அவனைத் தூக்கினாலும் என்னையே பார்த்துட்டு இருப்பான். என் பேரன் அவன்! என் மேல அவனுக்கு ரொம்ப பாசம். அன்னைக்கும் என்னையே பார்த்துட்டு இருந்தான். மறுநாள் அவனைத் தத்தெடுத்து கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க.

என் பேரன் என் கண்ணுக்குள்ளவே இருக்கான். இதுநாள் வரைக்கும் அவனைப் பார்க்கணும்னு தோணுச்சுன்னா ஓடிப்போய் பார்த்துடுவேன். இப்போ அப்படிப் பார்க்க முடியாதே... என் பேரன் முகம் என் கண்ணுக்குள்ளேயே நிற்குது. அவனைப் பார்க்காம இருக்க முடியலை. அவன் நினைவோடு என் வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன்'' என்றவரின் குரல் உடைகிறது. 

சுதந்திரம்

``எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கணும் அதைத்தான் நான் அந்தக் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். அவனை யார் தத்தெடுத்துட்டுப் போனாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவங்க பெங்களூர்னு சொன்னாங்க. அவங்க என் பேரனை நல்லா வளர்க்கணுங்குறது தெனமும் கடவுள்கிட்ட வேண்டிட்டு இருக்கேன். நிச்சயமா என்னை ஒருநாள் தேடி வருவான் சுதந்திரம். ஆனா, நான் அப்போ உயிரோட இருப்பேனானு எனக்குத் தெரியலை. ஆனா என் கடைசி மூச்சு வரைக்கும் அவன் நினைவுகள் எனக்குள்ள தேங்கி நிற்கும்'' என்றார் கீதா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்