ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனிலிருந்து அ.தி.மு.க-வுக்கு விழுந்த ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா!? | Poes Garden still supports ADMK because of Jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (11/06/2019)

கடைசி தொடர்பு:20:31 (11/06/2019)

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனிலிருந்து அ.தி.மு.க-வுக்கு விழுந்த ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா!?

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போயஸ் கார்டனில் அ.தி.மு.க. கூட்டணி வாங்கிய 260 ஓட்டுகளில் ரஜினிகாந்தின் ஓட்டும் இருக்கலாம்.

ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியில் அ.தி.மு.க-வின் செல்வாக்கு சரியவில்லை என்பதைக் காட்டியிருக்கிறது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும்போதெல்லாம் கோபாலபுரமும், போயஸ் கார்டனும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதியும், அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் அவர்கள் இருந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கச் செல்லும்போது, ஊடகத்தினரும், பத்திரிகையாளர்களும் அங்கே குவிவது வாடிக்கை. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இரண்டு ஆளுமைகளும் உயிரோடு இல்லை. ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில்தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயலலிதா வாக்களிப்பார். இந்த வாக்குச்சாவடியின் எல்லைக்குள்தான் போயஸ்கார்டன் ஏரியா வருகிறது. போயஸ்கார்டன் ஏரியா, ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதிக்குள் வருகிறது. அதாவது, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது, ஆயிரம் விளக்கு தொகுதி.

போயஸ் கார்டன்

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் இந்த முறை தயாநிதி மாறனும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளர் சாம் பாலும் போட்டியிட்டனர். அதில், மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். தயாநிதி மாறன் 4,48,911 வாக்குகளும், சாம்பால் 1,47,391 வாக்குகளும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமீலா நாசர் 92,249 வாக்குகளும் பெற்றனர். கார்த்திகேயன் (நாம் தமிழர்) 30,886 வாக்குகளும் அ.ம.மு.க கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் தெஹலான் பாகவி  23,741 ஓட்டுகளும் பெற்றனர்.

இவர்கள் போயஸ் தோட்டம் பகுதியில் வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு என்பதைப் பார்ப்போம். ஸ்டெல்லா மாரீஸ் வாக்குச் சாவடியில், போயஸ் தோட்டத்தைச் சேர்ந்த 666 பேர், இப்போது வாக்களித்திருக்கிறார்கள். இதில், தயாநிதி மாறனுக்கு (தி.மு.க.) 220 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியான பா.ம.க. வேட்பாளர் சாம் பாலுக்கு 260 ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. அதாவது, தி.மு.க.வைவிட அ.தி.மு.க கூட்டணிக்கு 40 ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. தொகுதியைத் தயாநிதி மாறன் கைப்பற்றிய போதிலும் போயஸ்கார்டன் பகுதியில் அவருக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கவில்லை.

போயஸ் கார்டன் ஏரியாவில் ஒவ்வொரு வேட்பாளர்களும் வாங்கிய வாக்குகள் விவரம்:

2019 நாடாளுமன்றத் தேர்தல்:
போஸ் கார்டன் நிலவரம் (மத்திய சென்னை)

பதிவானவை - 666
தயாநிதி மாறன் (தி.மு.க.) - 220
பார்த்தசாரதி (பகுஜன் சமாஜ் ) - 8
கமீலா நாசர் (ம.நீ.ம.) - 92
சி.எஸ்.கர்ணன் (ஆன்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) - 11
ஆர்.கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 10
கீதா லட்சுமி (பிரிமெட் பார்ட்டி ஆஃப் இந்தியா) - 2
சாம்பால் (பா.ம.க.) - 260
வளர்மதி (அகில இந்திய வள்ளலார் பேரவை) - 1
தெஹலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ.) - 11
குப்புசாமி (சுயேச்சை) -  1
சாமுவேல் பால் (சுயேச்சை) - 5
சாம்பால் (சுயேச்சை) - 7
கே.எம்.பிரபாகரன் (சுயேச்சை) - 1
என்.பிரபாகரன் (சுயேச்சை) - 1
மதனகோபால் (சுயேச்சை) - 1
ராஜ் ராமசந்த் (சுயேச்சை) - 6
வைத்தியநாதன் (சுயேச்சை) - 2
நோட்டா - 27

கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு போயஸ் தோட்டம் பகுதியில் 11 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கமீலா நாசர் 92 ஓட்டுகளை வாங்கியிருக்கிறார்.

போயஸ் கார்டன்

ஜெயலலிதா இறந்த பிறகும்கூட போயஸ்கார்டன் ஏரியாவில் அவருக்குத் தொடர்ந்து செல்வாக்கு இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, கடைசியாக நடைபெற்ற 2016 சட்டசபைத் தேர்தலில் போயஸ் கார்டன் ஏரியாவில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தேர்தலில் அ.தி.மு,.க-வின் வாக்குகள் சரிந்திருக்கின்றன. 2016 சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் கு.க.செல்வமும், அ.தி.மு.க சார்பில் பா.வளர்மதியும் போட்டியிட்டதில் கு.க.செல்வம் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் ஜெயலலிதா ஓட்டு போட்டார்.  அப்போது போயஸ் கார்டன் ஏரியாவிலிருந்து 647 பேர் வாக்களித்தனர். இதில் வளர்மதி (அ.தி.மு.க)  275 வாக்குகள் பெற்றார். செல்வம் (தி.மு.க) 155 ஓட்டுகள் வாங்கினார். தி.மு.க-வை விட 120 வாக்குகள் அதிகமாகப் பெற்றது அ.தி.மு.க.

அந்தத் தேர்தலில் போயஸ் தோட்டம் பகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த வாக்குகள் விவரம்:

2016 சட்டசபைத் தேர்தல்:
போஸ் கார்டன் நிலவரம் (ஆயிரம் விளக்கு)  

பதிவானவை - 647
கு.க.செல்வம் (தி.மு.க) - 155
பா.வளர்மதி (அ.தி.மு.க) - 275
எம்.சிவலிங்கம் (பி.ஜே.பி) - 144
ரெட்சன் சி.அம்பிகாபதி (ம.தி.மு.க) - 9
வி.ரங்கநாதன் (பா.ம.க) - 25
க.முருகேசன் (நாம் தமிழர்) - 1
எம்.இளங்கோ (இளைஞர் மாணவர் கட்சி) - 3
ஜாபர் சாதிக் (சுயேச்சை) - 1
மோகன் குமார் (சுயேச்சை) - 1
நோட்டா - 33

2016 சட்டசபைத் தேர்தலில் 120 வாக்குகள் அதிகம் பெற்ற அ.தி.மு.க., அவர் இறந்த பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வைவிட வெறும் 40 ஓட்டுகள்தான் அதிகமாகப் பெற்றிருக்கிறது. போயஸ் கார்டன் ஏரியாவில் அ.தி.மு.க-வுக்கு முன்பு இருந்த செல்வாக்கைவிட இப்போது செல்வாக்கு குறைந்திருக்கிறது. 2016 சட்டசபைத் தேர்தலில் போயஸ் கார்டன் ஏரியாவில் நோட்டாவுக்கு 33 ஓட்டுகள் விழுந்தன. இப்போது இது 27 ஆகக் குறைந்திருக்கிறது.

எல்லாம் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போயஸ் கார்டனில் அ.தி.மு.க. கூட்டணி வாங்கிய 260 ஓட்டுகளில் ரஜினிகாந்தின் ஓட்டும் இருக்கலாம். காரணம். தேர்தலுக்கு முன்பு ரஜினி வெளியிட்ட அறிக்கை. அதில், `தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதில் காங்கிரஸைவிட பி.ஜே.பி-க்குதான் ஆற்றல் இருக்கிறது என அவர் மறைமுகமாகச் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்