10 நாளில் இரண்டு மாணவிகள் மரணம்! வேலூர் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது? | with in 10 days Two girl students died in Vellore VIT University

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (12/06/2019)

கடைசி தொடர்பு:19:50 (12/06/2019)

10 நாளில் இரண்டு மாணவிகள் மரணம்! வேலூர் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக விடுதியில் 10 நாளில் இரண்டு மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் இறப்புக்கான காரணம் `தற்கொலை’ என்ற ஒற்றை வரியோடு மூடிமறைக்கப்படுவதால் வி.ஐ.டி மீது பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம்

வேலூரை அடுத்த காட்பாடியில் வி.ஐ.டி பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இங்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். ஸ்டார்ஸ் திட்டம் போன்ற சலுகைகளின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் சிலருக்கும் உயர்கல்வி கிடைக்க வி.ஐ.டி உதவிசெய்கிறது. அந்த வகையில் வி.ஐ.டி-யில் படித்துவந்த காட்பாடியைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் கடந்த மாதம் 31-ம் தேதி விடுதியில்  உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், அதே விடுதியில் தங்கியிருந்த பஞ்சாபைச் சேர்ந்த மற்றொரு மாணவியும்  9-ம் தேதி மாலை உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவமும் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன், உயிரிழந்த மாணவியின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பின்னரே, பஞ்சாபில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்தது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் 11-ம் தேதி வேலூருக்கு வந்தனர். மாணவியின் உடலைப் பார்வையிட்டு உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவி உயிரிழந்திருப்பது உண்மைதான். ஆனால், இரண்டு நாள்களாகியும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் இன்னும் புகார் அளிக்கவில்லை. மாணவியின் பெயர் கீர்த்தி மகாஜன் அல்லது அதிதி என்கிற இரண்டு பெயர்கள் அடிபடுகிறது. 23 வயதாகும் அந்த மாணவி பி.டெக் இறுதியாண்டு படித்துவந்தார். துணி காயவைக்கும் பிளாஸ்டிக் கயிற்றால் விடுதியில் உள்ள ஜன்னலில் மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஜன்னலில் கயிற்றை மாட்டிக்கொண்டால் உயிரிழப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உண்மை தெரியவரும்’’ என்றார்.

இதுசம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ``கடந்த 10 நாளில் இரண்டு மாணவிகள் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது உண்மைதான். அதற்கு காரணம், இரண்டு மாணவிகளும் அரியர் வைத்திருந்தனர். படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தனர். இந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டனர். வேறு ஏதும் காரணமில்லை" என்றனர்.