ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா?- கோவையில் என்.ஐ.ஏ நடத்திய அதிரடி சோதனை | NIA raids at 8 locations in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (12/06/2019)

கடைசி தொடர்பு:11:46 (12/06/2019)

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா?- கோவையில் என்.ஐ.ஏ நடத்திய அதிரடி சோதனை

ஐ எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு குறித்து கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளோடு சமூகவலைதளங்களில் தொடர்பு வைத்திருந்ததாக கோவையைச் சேர்ந்த ஏழு பேர் வீடுகளில் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது. இலங்கைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தலைவனாகச் செயல்பட்ட ஜாஹ்ரனுடன் தொடர்பிலிருந்தவர்களையெல்லாம் சுற்றி வளைக்க ஆரம்பித்தது இலங்கை அரசு. இலங்கையில் மட்டுமல்லாது, வேறு எங்கெங்கிருந்தெல்லாம் ஜாஹ்ரனுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள் என்ற விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது.  

அந்த வகையில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் மட்டுமல்லாது, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநிலத் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கோவையில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன், சலாவுதீன், கோவையைச் சேர்ந்த முகமது ஆசிக், ஆட்டோ பைசல், சாகுல், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகிய ஏழு இளைஞர்களுக்கும் இலங்கைக் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கும் சமூக வலைதளங்களில் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த முகமது ஆசிக் முற்றிலுமாக மறுத்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பதன் அர்த்தம்கூட எங்களுக்குத் தெரியாது. எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் வேண்டுமென்றே என்.ஐ.ஏ அதிகாரிகள் எங்களைப் பழி வாங்குகிறார்கள் என்று ஊடகங்களிடம் அவர் குமுறினார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றார்கள் என்.ஐ.ஏ  (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள்.  அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கைக்  குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு வைத்திருந்த கோவையைச் சேர்ந்த மற்றொரு ஏழு பேர் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணியிலிருந்து தீவிர சோதனையில்  ஈடுபட்டனர்.  உக்கடம் அன்பு நகரில் உள்ள அசாருதீன் வீட்டிலும் குனியமுத்தூரில் உள்ள அவரது டிராவல்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. இதேபோல போத்தனூர் சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா, குனியமுத்தூர் அபுபக்கர் சித்திக் மற்றும் அல்அமீன் காலனியைச் சேர்ந்த இதயதுல்லா, சாகிம்ஷா ஆகிய ஏழுபேர் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களது வீடுகளில் இலங்கைக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என்பது  குறித்து விசாரித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க