`அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியாரே?' - தலைமைக் கழகத்தை மிரளவைத்த சுவரொட்டி | AIADMK executives Meeting starts in royapettah head office

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (12/06/2019)

கடைசி தொடர்பு:11:25 (12/06/2019)

`அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியாரே?' - தலைமைக் கழகத்தை மிரளவைத்த சுவரொட்டி

உட்கட்சி பிரச்னைகளுக்கு மத்தியில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

எடப்பாடி

`கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்' என ராஜன்செல்லப்பா தலைமையில் சிலர் அ.தி.மு.க-வில் போர்க்கொடி தூக்கியுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் மீண்டும் புயலைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. இப்படிச் சொல்லியது மட்டுமல்லாமல் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ராஜன் செல்லப்பா `கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்லும் வகையில் உத்தரவிடக்கூடிய வலுவான தலைமை வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

பன்னீர்செல்வம்

அடுத்தடுத்த குழப்பங்களால் அ.தி.மு.க தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படியான உட்கட்சி பிரச்னைகளுக்கு மத்தியில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு வரும் எடப்பாடியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வைத்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போஸ்டர்கள்

`அ.தி.மு.க-வின் புதிய பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்' என எடப்பாடியை குறிப்பிட்டு தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள். `ஒற்றைத் தலைமை' சர்ச்சைக்கு என்ன தீர்வு என்பது இன்னும் வெளியாகாத நிலையில் எடப்பாடியை பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியல் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

போஸ்டர்

இதுஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என சிவகங்கை பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க