காசி சென்று திரும்பியபோது ரயிலில் என்ன நடந்தது?- உயிரிழந்தவரின் உறவினர்கள் கண்ணீர்  | Four pilgrims from Tamil Nadu die in train near Jhansi

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:13:20 (12/06/2019)

காசி சென்று திரும்பியபோது ரயிலில் என்ன நடந்தது?- உயிரிழந்தவரின் உறவினர்கள் கண்ணீர் 

காசிக்கு புனிதயாத்திரை  சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த நீலகிரியைச் சேர்ந்த 3 முதியவர்கள் உத்தரப்பிரேதச மாநிலம் ஜான்சியில் பலியான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசிக்கு சென்று திருப்பியபோது வெயிலுக்கு பலியான பாலகிருஷ்ணன், பச்சையா, சுப்பைய்யா

நீலகிரி, கோவை பகுதிகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட 68 பக்தர்கள் கடந்த திங்கள்கிழமை (3-6-19) அன்று கோவையிலிருந்து  வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு ரயில் மூலம் சுற்றுலா சென்றனர். கயா, அலகாபாத் திரிவேணிசங்கமம், ஆக்ரா உள்ளிட்ட பகுதிளுக்குச் சென்று சுற்றுலாவை முடித்துவிட்டு அனைவரும் ஆக்ராவிலிருந்து கோவைக்கு வர கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 8, எஸ்9 பெட்டிகளில் பயணம் செய்தனர். ரயில் ஜான்சி ரயில் நிலையம் வந்த போது அப்பகுதியில் கடும் அனல்காற்று வீசியுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வெயில் 113 டிகிரிக்கும் மேல் இருந்துள்ளது. இதனால் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் வெப்பக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கடுமையான வெப்பத்தை தாங்க முடியாத கோவை மற்றும் நீலகிரி குன்னூரைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக ரயிலிலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குன்னூர் ஓட்டுப்பட்டரையைச் சேர்ந்த சுப்பைய்யா வயது (88) ஓய்வு பெற்ற தாசில்தார். மற்றும் அவரது உறவினர் பாலகிருஷ்ணன் வயது (70) மாவட்ட கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த பச்சையா (80) என்பதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து வெப்பத்தாக்கத்தால் இறந்த பச்சையா உறவினர் முத்து கூறுகையில், ``பச்சையாவுக்கு காசிக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். கோவையில் உள்ள உறவினர்கள் சொல்லியதால் ஏஜென்டுகள் மூலம் புனித சுற்றுலாவுக்குச் சென்றார். மொத்தம் 8 நாள்கள் சுற்றுலாவில் காசி, கயா போன்ற இடங்களைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் ஜான்சி ரயில் நிலையத்தில் வெயில் தாங்க முடியாமல் இறந்துவிட்டார் எனத் தகவல் வந்தது. ஊட்டியிலிருந்து பழகியவரால் கோவைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றால்கூட வெயில் தாங்க மாட்டார். உடனே திரும்பிவிடுவார். தற்போது வெயில் தாக்கத்தால் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவருடன் சென்றவர்கள் இன்று காலை கோவைக்குத் திரும்பிவிட்டனர். பச்சையாவின் உடல் ரயிலில் வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கோவை வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்" என்றார்.