`என் நண்பனுடன் பழகியது பிடிக்கல!'- சந்தேகத்தால் மனைவி, குழந்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன் | husband killed his wife and son at namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/06/2019)

கடைசி தொடர்பு:13:50 (12/06/2019)

`என் நண்பனுடன் பழகியது பிடிக்கல!'- சந்தேகத்தால் மனைவி, குழந்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்

நாமக்கல்லிலுள்ள தோட்டப் பகுதியில் தாய் மற்றும் குழந்தை கழுத்தறுந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மனைவி, குழந்தை

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே மாணிக்கவேலூர் அமைந்துள்ளது. இங்கு சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்தக் கிராமத்துக்கு அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கௌரி. இவரும் சுரேஷும் நான்காண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். மேலும், இத்தம்பதிக்கு புகழ்வின் என்ற குழந்தை உள்ளது. சுரேஷும், கௌரியும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், அவர்களுக்குள் கடுமையான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. 

இந்த நிலையில், சம்பவத்தன்று சுரேஷ், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்களின் சொந்தத் தோட்டத்துக்குச் சென்றுள்ளார். மூன்று பேரும் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் குடும்பத்தினர், தோட்டத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கௌரி மற்றும் புகழ்வின் கொடுமையான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுரேஷும் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை, உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் எருமப்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், நான்கு நாள்களுக்கு முன்பு சுரேஷின் நண்பரான வீரக்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது கௌரியைப் பார்க்கச் சென்றுள்ளார். மேலும், பல மணி நேரம் கழித்தே வீரக்குமார் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இத்தகைய செயலில் சுரேஷ் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சுரேஷ் சிறிது நலம் அடைந்த பிறகு விசாரணையை தொடங்க உள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 

மனைவியைக் கொன்ற கணவன் சுரேஷ்

பின்னர் சுரேஷ் தனது வாக்குமூலத்தை கைப்பட எழுதி போலீஸாரிடம் கொடுத்தார். அதில், `என் நண்பர் வீரக்குமார் என் மனைவியிடம் பேசி வந்தது எனக்குப் பிடிக்கவில்லை. இதைக் கடந்த 9-ம் தேதியன்று என் மனைவியிடம் கூறினேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனம் உடைந்த என் மனைவி மாலையில் தோட்டத்துக்குச் செல்வதற்கு முன் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தோட்டத்துக்கு வந்த பிறகு கீழே விழுந்து மயக்க நிலையில் இருந்த அவரைக் காப்பாற்றாமல் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன். பிறகு நானும் தற்கொலை செய்ய முயன்றபோது என் மகனை அநாதையாக விட்டுச் செல்ல மனம் இல்லாமல் அவனையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன். இதையடுத்து, மின்சாரம் வைத்து எனக்கு நானே தற்கொலைக்கு முயன்றேன். அதன் பிறகு எனது கழுத்தை நானே அறுத்துக்கொண்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை