`சமூகத்தின் நிஜ வாழ்க்கை எழுதத் தூண்டியது!' - எழுத்தாளர் இமையம் | Writer Imayam Speech At Canada Literary Garden Award Function

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:19 (12/06/2019)

`சமூகத்தின் நிஜ வாழ்க்கை எழுதத் தூண்டியது!' - எழுத்தாளர் இமையம்

2018-க்கான கனடாவின் தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது, வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமையத்திற்கு கனடாவில் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில், மருத்துவர் ஜானகிராமன், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரீஆனந்தசங்கரீ, டைலர் ரிச்சார்ட், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். 

நாவலுக்கான புனைவுப்பரிசு `நடுகல்’ நாவலுக்காக தீபச்செல்வனுக்கும், அபுனைவுப் பரிசு `காக்கா கொத்திய காயம்’ என்ற நூலுக்காக உமாஜிக்கும், கவிதைப்பரிசு `சிறிய எண்கள் உறங்கும் அறை’ தொகுப்புக்காக போகன்சங்கருக்கும், மொழிபெயர்ப்பு பரிசு `பீரங்கிப்பாடல்கள்‘ நூலுக்காக இரா.முருகனுக்கும், ஆங்கில மொழிபெயர்ப்பு பரிசு Beyond the Sea நூலுக்காக பேராசிரியர் ரங்கசாமிகார்த்திகேசுக்கும் வழங்கப்பட்டன. சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது ராமசாமி துரைபாண்டிக்கும், மாணவர்கட்டுரைப் போட்டி பரிசு செல்வி கல்யாணி ராதாகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசுகள் எஸ்.திருச்செல்வம், ம.நவீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. 

இமையம்

இயல் விருதைப் பெற்றுக்கொண்ட எழுத்தாளர் இமையம் பேசியதாவது, “நான் எழுதியுள்ள ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத்தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டதில்லை. எழுத்தாளனாகியே தீரவேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டேன். அதனால் தொடர்ந்து எழுதித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டதல்ல. நடைமுறைச் சமூகத்தின் நிஜவாழ்க்கை என்ற கந்தக நெருப்புதான் என்னை எழுதத்தூண்டியது. இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது” என இமையம் பேசினார்.

எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். 
 


அதிகம் படித்தவை