`அ.தி.மு.க கோட்டையை வென்றதால் பேனர் வைத்தோம்!' - தி.மு.க-வினர் சொல்லும் காரணம் | DMK flags, banners fixed large number in Pollachi

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (12/06/2019)

கடைசி தொடர்பு:14:10 (12/06/2019)

`அ.தி.மு.க கோட்டையை வென்றதால் பேனர் வைத்தோம்!' - தி.மு.க-வினர் சொல்லும் காரணம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வருகைக்காகப் பொள்ளாச்சியில், கொடிகளும் பேனர்களும் குவிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க கொடி

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, நேற்று கோவைக்கு வந்த ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நன்றி சொன்னார். இதையடுத்து இன்று காலை கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ள ஸ்டாலின், மாலை பொள்ளாச்சிக்கு செல்ல உள்ளார்.

ஸ்டாலின் வருகையால் தி.மு.க-வினர் உற்சாகத்தில் உள்ளனர். அ.தி.மு.க-வின் கோட்டையான பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியை, 39 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க கைப்பற்றியுள்ளது. இதனால், ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதற்காகக் கோவை டு பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்துக்கு, சாலையின் இருபுறங்களிலும் தி.மு.க-வின் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். குறிப்பாக, டிவைடரிலும் தி.மு.க கொடிதான் காணப்படுகிறது.

தி.மு.க பேனர்

அதேபோல, பேனர், ஃப்ளெக்ஸ்களும் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. “நான் செயல் தலைவரான உடனேயே, எந்த நிகழ்ச்சிக்கும் அதிகளவு கொடி கட்டுவது, பேனர், ஃப்ளெக்ஸ் வைப்பது எல்லாம் கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.” கோவையில் அ.தி.மு.க அரசு நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அலங்கார வளைவால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்த மென்பொறியாளர் ரகுவின் வீட்டுக்குச் சென்றபோது, ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. தற்போது, அதே ஸ்டாலினின் வருகைக்காகப் கொடிகள் குவிக்கப்பட்டு, பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தி.மு.க பிரமுகர்களிடம் கேட்டதற்கு, "பேனர் வைக்க சொல்லி தலைமை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 'பொள்ளாச்சி எங்களது கோட்டை' என்று அ.தி.மு.க-வினர் கூறிவந்தனர். 39 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கோட்டையை நாங்கள் வென்றிருக்கிறோம். அதைக் கொண்டாடும் விதமாகவும் தலைவரை வரவேற்பதற்காகவும்தான், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் கொடிகளையும் பேனர்களையும் வைத்துள்ளோம்" என்றனர்.