``அவருக்கு உதவிகள் குவிய மனசுக்குள்ள வருத்தம் அதிகமாகிடுச்சு!" - `நெல்' ஜெயராமன் மனைவி சித்ரா | 'Nel' Jayaraman wife talks about her husband's memories

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:52 (12/06/2019)

``அவருக்கு உதவிகள் குவிய மனசுக்குள்ள வருத்தம் அதிகமாகிடுச்சு!" - `நெல்' ஜெயராமன் மனைவி சித்ரா

"தற்போது 174 வகை பாரம்பர்ய நெல் வகைகள் எங்ககிட்ட இருக்கு. அவற்றை இன்னும் கணிசமாக உயர்த்துவதுடன், புதிய வகை நெல் ரகங்களைக் கண்டறியவும் அதிக முயற்சிகளை எடுத்துகிட்டிருக்கிறோம். எனவே, ஒவ்வொரு விதை நெல்லிலும் என் கணவர் வாழ்வார்!"

பாரம்பர்ய நெல் ரகங்களுக்குப் புத்துயிர் அளித்திடும் வகையில், ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்திவந்தார் `நெல்' ஜெயராமன். இவரின் மறைவுக்குப் பிறகு இந்த ஆண்டு நெல் திருவிழாவை நடத்தியிருக்கிறார் அவர் மனைவி சித்ரா ஜெயராமன். நெல் திருவிழா மற்றும் கணவரின் நினைவுகளைப் பகிர்கிறார் சித்ரா.

'நெல்' ஜெயராமன் மனைவி

``இப்போ நடந்து முடிந்தது, 13-வது வருட நெல் திருவிழா. ஒவ்வொரு வருஷமும் இந்தத் திருவிழாவை நடத்த என் கணவர் மேற்கொண்ட முயற்சிகள் பலருக்கும் தெரியும். ஆனா, அவர் இல்லாம நடக்கிற முதல் திருவிழா இது. அதனால, இந்த வருட திருவிழாவுல என் கணவரின் இழப்பை அதிகளவில் உணர்ந்தோம். என் கணவர் இறந்து ஆறு மாதம்தான் ஆகுது. அவர் இறப்பினால் உண்டான வேதனையிலிருந்து இன்னும் நாங்க முழுமையா மீண்டு வரலை. எனவே, இந்த வருஷ திருவிழாவை நடத்துறதில் எங்களுக்கு நிறைய தயக்கம் இருந்துச்சு. ஆனா, அவர் தொடங்கிய இந்தத் திருவிழாவை தொடர்ந்து நடத்தணும்; கணவரின் உழைப்புக்கு அர்த்தம் சேர்க்கணும்னு நினைச்சோம்.

'நெல்' ஜெயராமன்

எனவே, என் கணவரின் அண்ணன், அவர் மகன் மற்றும் நண்பர்கள் பலரும் உதவ முன்வந்தாங்க. அதனால திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த வருஷ திருவிழாவைச் சிறப்புடன் நடத்தினோம். அதில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகிட்டாங்க. வழக்கம்போல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகிட்டு, பாரம்பர்ய விதைகளை வாங்கிட்டுப்போனாங்க. போன வருஷம் விதை வாங்கிட்டுப்போனவங்க, அதை மறு உற்பத்தி செய்து இந்த வருஷம் இரு மடங்கா திருப்பிக்கொடுத்தாங்க. திருவிழாவின் இரண்டாம் நாள், பாரம்பர்ய உணவுத் திருவிழாவையும் நல்ல முறையில் செய்தோம். 

'நெல்' ஜெயராமன்

நெல் திருவிழா நல்லபடியா முடிஞ்சது. ஆனா, விழாவில் கலந்துகிட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் விவசாயிகள் எல்லோரும் என் கணவரின் மறைவு குறித்து மனதளவில் மிகவும் வருத்தப்பட்டாங்க. தற்போது 174 வகை பாரம்பர்ய நெல் வகைகள் எங்ககிட்ட இருக்கு. அவற்றை இன்னும் கணிசமாக உயர்த்துவதுடன், புதிய வகை நெல் ரகங்களைக் கண்டறியவும் அதிக முயற்சிகளை எடுத்துகிட்டிருக்கிறோம். எனவே, ஒவ்வொரு விதை நெல்லிலும் என் கணவர் வாழ்வார்" என்று உற்சாகமாகக் கூறும் சித்ராவின் குரல், கணவரின் நினைவுகள் குறித்து கேட்டதும் லேசாகிறது. 

``அவரின் இழப்பை என் ஒவ்வொரு செயல்பாட்டிலும் உணர்கிறேன். அதை வார்த்தைகளில் விவரிக்கத் தெரியலை. என் கணவரின் உடல்நிலை சரியில்லைனு செய்தி வெளியானதும், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள்னு பலரும் அவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன்வந்தாங்க. அவங்க எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி! அது ஒரு பக்கம் மகிழ்ச்சியா இருந்துச்சு. அதேசமயம் நாங்க பிறருக்கு உதவி செய்யணும்னு நினைச்ச நிலையில, எங்களுக்கு மத்தவங்க உதவும் நிலைக்கு உள்ளாகிட்டோமேனு மனசுக்குள்ள வருத்தம் அதிகமாகிடுச்சு. அவர் சிகிச்சை பெற்றுவந்த காலங்கள் ரொம்பவே வலி நிறைந்ததா இருந்துச்சு. அவர் குணமாகி வந்துடுவார்னு உறுதியா நம்பினேன். ஆனா, இயற்கையின் தீர்ப்பை ஏத்துக்கிட்டுதானே ஆகணும். 

'நெல்' ஜெயராமன்

என் கணவரின் வாழ்க்கை வரலாறு, பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கு. அதனால எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்காகவும், என் கணவரின் மருத்துவச் செலவுக்கு உதவியதுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திச்சு நன்றி சொன்னேன். நான் அங்கன்வாடி பணியாளர். அந்த வேலையுடன், என் கணவர் வழியில் இயற்கை விவசாய முன்னேற்றத்துக்கு வேலை செய்யணும். நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் பத்தி இன்னும் நிறைய விழிப்புணர்வு கொடுக்கணும். இதை இளைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும். அதுக்கான முயற்சிகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். இயற்கை விவசாயத்தைக் கைவிடமாட்டேன்" என்கிறார் உறுதியான நம்பிக்கையுடன். 


டிரெண்டிங் @ விகடன்