"தி.மு.க-வில் இனி தாக்குப்பிடிக்க முடியாது" - காரணம் சொல்லும் ராதாரவி | RadhaRavi explains why he Joints ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:30 (12/06/2019)

"தி.மு.க-வில் இனி தாக்குப்பிடிக்க முடியாது" - காரணம் சொல்லும் ராதாரவி

என்னாடா இது, ஒரு கட்சித் தலைமையே இப்படி சொல்லுதேன்னு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. தி.மு.க தலைவர் அப்படி சொல்லச் சொல்லியிருப்பாரான்னா தெரியலை. ஏன்னா, தி.மு.க-வில் இப்போ இரட்டைத் தலைமை இருக்கு. இன்னொருவர் யாரென்று சொல்ல விரும்பல.

அரசியலில் கட்சிவிட்டு கட்சி தாவுவது என்பது ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையக்கூடியதோ அல்ல என்பதை அவ்வப்போது நிரூபித்து வருபவர்களின் பட்டியலில், நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவியும் இணைந்திருக்கிறார்.

ராதாரவி

திராவிட இயக்கத்தில் தன்னைப் பெரிதும் பிணைத்துக்கொண்ட எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவி, தன்னுடைய அரசியல் பயணத்தை தி.மு.க-வில் தொடர்ந்தார். அதன்பின் அ.தி.மு.க-வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தார். பின்னர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, என் தாய்வீடு தி.மு.க-தான் என்கிற முழக்கத்தோடு தி.மு.க-வில் இணைந்தார். கடந்த மார்ச் மாதம் கொலையுதிர்காலம் திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகை நயன்தாரா குறித்துப் பேசியதற்கு அவருக்கு கடுமையான எதிர்வினைகள் கிளம்பின. அதன் விளைவாக, தி.மு.க அடிப்படை உறுப்பினரிலிருந்தும் ராதாரவி நீக்கப்பட்டார். இத்தகைய சூழலில், மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் ராதாரவி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வந்தபின் அவர் பேசியது."தி.மு.க-விலிருந்து நான் வெளியேற்றப்பட்டபோது  உண்மையாய் இருப்பவனை கட்சி ஒருபோதும் மதிப்பதில்லை என்பதை இரண்டாவது முறையாக உணர்ந்தேன். இருப்பினும், நான் வேறு கட்சிக்குச் செல்வதைப் பற்றி யோசிக்கல. ஆனா, நடக்கவிருக்கிற நடிகர் சங்க தேர்தலுக்காக நான் ஓட்டு கேட்கப் போயிருந்தேன். அப்போ, எனக்காக யாரும் வேலை செய்யக்கூடாதுனு தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து உத்தரவு வந்ததாகச் சொன்னாங்க. என்னாடா இது, ஒரு கட்சித் தலைமையே இப்படிச் சொல்லுதேன்னு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.

தி.மு.க தலைவர் அப்படி சொல்லச் சொல்லியிருப்பாரான்னா தெரியலை. நம்மால அங்க இனி தாக்குப்பிடிக்க முடியாது. ஏன்னா, தி.மு.க-வில் இப்போ இரட்டைத் தலைமை இருக்கு. இன்னொருவர் யாருன்னு சொல்ல விரும்பல. இனியும் அங்க மதிப்பு இருக்காதுனு முடிவு பண்ணிட்டு, அ.தி.மு.க-வில் வந்து சேர்ந்துட்டேன்" என்று குரலில் வருத்தமும் முகத்தில் புத்துணர்வும் கலந்த தொனியில் பேசினார் ராதாரவி.  ஒருவேளை, இப்போது எம்.ஆர்.ராதா இருந்திருந்தால், சமகால அரசியல் போக்கையும் அதில் ராதாரவியின் செயல்பாட்டையும் எப்படி விமர்சித்திருப்பார் என யோசித்துப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது.