பா.ஜ.க-வில் ஜி.கே.வாசன்..? - தகிக்கும் த.மா.கா | if any chance to g.k.vasan joining bjp?

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (12/06/2019)

கடைசி தொடர்பு:17:20 (12/06/2019)

பா.ஜ.க-வில் ஜி.கே.வாசன்..? - தகிக்கும் த.மா.கா

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த வாசன், அதற்குப் பின்னால் இனி தமிழகத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நமக்குத் தேவை என எண்ணினார்.

வாசன்

மக்களவைத் தேர்தலில் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் இருப்பதால், வேறு வழியின்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜி.கே.வாசன். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, ` ஜி.கே.வாசன் பா.ஜ.க-வுடன் இணைய உள்ளார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்’ என்ற தகவல்கள் பரவிவருகின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை அறிய, தமிழ்மாநில காங்கிஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அகில இந்திய காங்கிரஸிலிருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கினார். இதற்குக் காரணம், அகில இந்திய அரசியல் கட்சியில் மாநில நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்று கருதினார் அவர்.  

பிரசாரம்

குறிப்பாக காவிரி, முல்லைப்பெரியார், ஈழத்தமிழர்கள் பிரச்னை உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பிரச்னைகளில், அகில இந்திய தலைமை கண்டும் காணாமல் இருப்பதால், இனி தேசிய கட்சியில் இருப்பதில் பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த  ஜி.கே.வாசன், தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கி, `வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ மாநில நலன் சார்ந்த தேசியப் பார்வையோடு இயக்கத்தை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலன் கூட்டணியில் அங்கம் வகித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க  தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தார்.

தேர்தல்

 அந்தக் கூட்டணியில் பா.ஜ.க-வும் இடம்பெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைத்ததே தவிர, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், தமிழ்மாநில காங்கிரஸ் வருகின்ற 16-ம் தேதி மாவட்டத்  தலைவர்கள், பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் நடத்த உள்ளது.  உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், அதில், த.மா.கா எந்தெந்தப் பகுதிகளை கேட்டுப் பெறவேண்டும் என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்க இந்தக் கூட்டம் கூட்டபடுகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது.

தமிழ்மாநில காங்கிரஸ்

தமிழகத்தில் பா.ஜ.க-வின் தலைவர் யார் என்பதை அகில இந்தியத் தலைமை தீர்மானிக்கும். வாசனைப் பொறுத்தவரை தமிழ்மாநில காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் சேரவேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. வாசனை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க-வுக்கும் இல்லை. ஏனென்றால், அகில இந்திய காங்கிரஸில் பொதுச்செயலளாராக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த  ஜி.கே.வாசன், அதற்குப் பின், இனி தமிழகத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நமக்குத் தேவை என எண்ணினார். எப்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், 1969-ல்  காங்கிரஸ் பிளவுக்குப் பின், தன்னுடைய அரசியலை தமிழகத்தோடு நிறுத்திக்கொண்டாரோ, அதேபோல வாசனும் தமிழகத்தின் நலன் சார்ந்து, தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்து இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

வாசன்

எனவே, பா.ஜ.க-வுடன் சேரவேண்டிய சூழ்நிலையுமில்லை, அவசியமுமில்லை.  தமிழகத்திலிருக்கும் காங்கிரஸ் தலைமை 9 இடங்களைப் பெற்று 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தொண்டர்கள் என்று பார்த்தால், காங்கிரஸைவிட தமிழ் மாநில காங்கிரஸில் தொண்டர்கள் அதிகம். காரணம், மூப்பனரால் உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், இன்றைக்கு அவரது மகன் வாசனாலும் நடத்தப்படுகிறது. எனவே, தொண்டர்களைப் பொறுத்தவரை தேசிய எண்ணம் கொண்டவராக இருந்தாலும்கூட, மூப்பனாரிடம் இருந்த பாசத்தால் தொடர்ந்து கட்சியில் இருக்கிறார்கள்.

பா.ஜ.க-வுடன் தமிழ்மாநில காங்கிரஸ் இணையப்போகிறது,  ஜி.கே.வாசன் பா.ஜ.க தலைவராகப்போகிறார் என்ற வதந்தியைக் கிளப்பி, அதன்மூலம் த.மா.கா தொண்டர்களைத் தன்பக்கம் இழுத்துவிடலாம் என காங்கிரஸ் தலைமை கணக்கப்போடுகிறது. தமிழ்மாநில காங்கிரஸைப் பொறுத்தவரை  ஜி.கே.வாசன், ஒருபோதும் பா.ஜ.க-வுடன் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார். இயக்கத்தைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்பது த.மா.க தொண்டர்களின் எண்ணமும் அதுதான்” என்கின்றனர்.