``சொத்துத் தகராறில் பறிபோன எருமைமாட்டின் கண்!” - ஈரோட்டில் அவலம் | buffalo eye damaged while property fight

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/06/2019)

கடைசி தொடர்பு:11:21 (13/06/2019)

``சொத்துத் தகராறில் பறிபோன எருமைமாட்டின் கண்!” - ஈரோட்டில் அவலம்

பங்காளிகளுடன் ஏற்பட்ட நில ஆக்கிரமிப்பு தகராற்றின்போது, கடப்பாரையால் மாட்டின் கண்ணை வாலிபர் தாக்கியதால், தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பார்வை இழந்த மாட்டுடன் ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலை அடுத்துள்ள செங்கோடம்பள்ளத்தில் வசித்துவருகின்றனர் பொன்னுசாமி, செல்வராஜ். இவரது தாயாரான வள்ளியம்மாள், செங்கோடம்பள்ளத்திலுள்ள நாராக்காடு பகுதியில் வசித்துவருகிறார். இதேபகுதியில் இவருக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. இதை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு, இவரது பங்காளிகள் இவர்களை பலமுறை தொந்தரவு செய்துவந்துள்ளனர். கடந்த மாதம் 11-ம் தேதியன்று, வள்ளியம்மாளின் மகன்களான பொன்னுச்சாமி, செல்வராஜ் இருவரும் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளனர். அந்தச் சமயம், வள்ளியம்மாள் வசித்துவரும் நாராக்காட்டிற்கு வந்த இவரது பங்காளியான யஷ்வந்த் குமார் மற்றும் வள்ளியம்மாளின் உறவினர்களான குருசாமி, சாவித்திரி, சிவகாமியம்மாளைத் தாக்கியதோடு, வீட்டில் கட்டப்பட்டிருந்த எருமை மாட்டின் வலது கண்ணையும் கடப்பாரையினால் தாக்கியுள்ளனர். இதனால், மாடு தனது வலது பக்கப் பார்வையை இழந்தது. இச்சம்பவம் அக்குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ஆட்சியர்இந்தச் சம்பவம் தொடர்பாக காஞ்சிக்கோவிலுக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளார்கள். 

வள்ளியம்மாளின் மகன்களான பொன்னுசாமி மற்றும் செல்வராஜ் இதுபற்றிக் கூறுகையில், "சொத்துக்காக வாயில்லா ஜீவனைக் கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், போலீஸிலும் காசைக் கொடுத்து கேஸ் நடத்த விடாம செய்துட்டாங்க. கை, கால் முறிந்து 20 நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த எங்கள் அம்மாவையும் உறவினர்களையும் ஒரு தடவைகூட காவல்துறை வந்து விசாரிக்கவில்லை. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கலை. மாட்டோட கண்ணுல பலமா அடிபட்டதனால இனிமேல் பாா்வை தெரியாது அடிமாட்டுக்கு கொடுத்திருங்கன்னு மருத்துவர் சொல்லிட்டாரு. அது எங்கள் அம்மாவுக்கு சொந்தமான நிலம், அதுக்கான பட்டா எல்லாம் எங்ககிட்ட இருக்கு. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரை  நடவடிக்கை எடுக்கச் செல்லி ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அவர் விரைவில் நடவடிக்கை எடுக்கச் சொல்றேன்னு சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.

சொத்துத் தகராறுக்காக அப்பாவி மாட்டைப் பலியாக்கியிருக்கும் சம்பவம், மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.