கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - 10 வீடுகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதி | sea outrage in kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (13/06/2019)

கடைசி தொடர்பு:08:10 (13/06/2019)

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - 10 வீடுகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் கடல் ஓரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

கடல் சீற்றம்

கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த நான்கு நாள்களுக்கு மேலாக மழை பெய்துவருகிறது. மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகவும், இரண்டு வீடுகள் பாதியும் சேதம் அடைந்துள்ளன. மேலும், காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு அருகே `வாயு' புயலாக மாறியதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. வள்ளவிளை கடலோரக் கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இடிந்த வீடுகள்

கடல் சீற்றம் காரணமாக இதுவரை சுமார் பத்து வீடுகள் இடிந்துள்ளன. தங்கள் வீடுகள் இடிந்ததால் பாதிக்கப்பட்ட கடலோர மக்கள் பலரும் தங்களில் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். வீடு சேதத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கன்னியாகுமரி கடல்பகுதி சீற்றத்துடம் காணப்படும். ஆனால், இந்தமுறை கடல் சீற்றம் அதிகமாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.