நாம் குடிக்கும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? #SpotVisit | How safe is packaged drinking water

வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (13/06/2019)

கடைசி தொடர்பு:10:02 (13/06/2019)

நாம் குடிக்கும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? #SpotVisit

அண்மையில் வெளியான தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில், சென்னையில் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நாம் குடிக்கும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? #SpotVisit

தண்ணீரை விலைக்கு விற்பதே இயற்கை விரோதம், மனித விரோதம் என்ற குற்றச்சாட்டுகள் அண்மைக்காலங்களில் பெரும்பான்மையான சூழலியல் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நாம் விலை கொடுத்து வாங்கும் நீர் உண்மையில் சுத்தமானதா என்பதையும் நாம் அறிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று.

'சுத்தமான குடிநீர்' என்றே இங்குள்ள பெருநிறுவனங்கள் விற்கும் பாட்டில் நீர் முதல் வீடுகளில், அலுவலகங்களில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கேன் தண்ணீர்வரை எல்லா வகை விலையுள்ள குடிநீரும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், அண்மையில் வெளியான தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில், சென்னையில் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தண்ணீர்

இதுகுறித்து களநிலவரத்தை அறிந்துகொள்ள சென்னையிலிருக்கும் சில கேன் தண்ணீர் சுத்திகரிப்பு மையங்களை அணுகினேன். போரூர், வடபழநி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் என எல்லா பகுதிகளிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு மையங்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தண்ணீர் சுத்திகரிப்பு முறை பற்றி அறிந்துகொள்ள நேரில் வருகிறேன் என்றதும், அதில் பெரும்பான்மையானவர்கள் ஊடகத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே மறுத்துவிட்டனர். அதனால், வேறு சில நிறுவனங்களிடம் பேசும்போது, தண்ணீர் நிறுவனம் குறித்து ஒரு திரைப்படம் எடுக்கிறோம், அதற்காகச் சில தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினேன், அவர்களும் சம்மதித்தனர். அப்படி, வடபழநியிலுள்ள ஒரு குடிநீர் நிறுவனத்துக்குச் சென்றேன்.

சென்றதும், என்னிடம் குடிநீரைச் சுத்தம் செய்யும் முறைகளைப் பற்றி நன்றாக விளக்கினார்கள். அவர்கள் கூறியதாவது, "பொதுவாகத் தண்ணீரை இதுபோன்ற சுத்திகரிப்பு மையங்களில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று முறைகளில் சுத்திகரித்து, பாட்டிலில் நிரப்பி விற்பனைக்கு அனுப்புவோம். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ், டிஸ்டில்லேஷன், ஃபில்ட்ரேஷன் என சுத்திகரிப்பு முறைகள் பல வகைப்படும்" என்றனர்.

தண்ணீர்

மேலும், டிஸ்டில்லேஷன்தான் இதில் மிகச் சிக்கலான செயல்முறை என்றும் அதற்கு மட்டுமே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்றும் கூறினர். "சாதாரணமாக ஃபில்ட்ரேஷனிலோ, ரிவர்ஸ் ஆஸ்மாசிஸிலோ வடிகட்டப்படும் நீர் டிஸ்டிலேஷன் முறைக்கு வரும்போது முதலில் கொதிக்கவைக்கப்படும். கொதிக்கும் நீர் ஆவியாக மாறி குழாய்கள் வழியாகக் குளிர்சாதன பகுதிக்குச் செல்லும். அதில் உள்ள கண்டன்ஸர் சூடான நீராவியைக் குளிர்வித்து மீண்டும் நீராக்கிவிடும். இந்த முறைதான் இருக்கும் எல்லா சுத்திகரிக்கும் முறைகளில் மிகப் பாதுகாப்பான முறை" என அவர்கள் விளக்கினர்.

பொதுவாக டிஸ்டில்லேஷன் முறையை வைத்து எவ்வளவு அசுத்தமான நீரையும் சுத்தமாக்கிவிட முடியுமாம். கழிவுநீர், கடல் நீர் என எல்லா வகை நீரையும் சுத்திகரிக்க இந்த முறையைத்தான் உலகம் முழுக்கப் பயன்படுத்திவருகின்றனர் என்றும் கூறினார். "ஆனால், இதில் உள்ள ஒரே சிக்கல், டிஸ்டில்லேஷன் முறையில் உற்பத்தியாகும் நீரில் இயற்கை நீரிலிருக்கும் எந்தவித மினரலும் இருக்காது. அதனால் அதைக் குடிப்பது, உடல்நிலையில் பெரும் சிக்கலுக்குள்ளாகும்"எனக் கூறினார்கள். அப்படியென்றால், கடல் நீரைக் குடிநீராக்கும் முறையிலிருந்து உற்பத்தியாகும் தண்ணீரைக் குடிக்க முடியாதா எனக் கேட்டபோது, "இல்லை. அப்படி வரும் நீரை நேரடியாகக் குடிக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் கடல் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் கொஞ்சம் பழைய முறைதான். அதனால், 50 சதவிகிதம் சுத்திகரித்த நீரும், 50 சதவிகிதம் சாதாரணக் குடிநீரும் சேர்த்துத்தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது" என்ற தகவலைப் பகிர்ந்தனர்.

அதே காரணம் குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கும் பொருந்துமாம். "இதனால் கடல் நீர் சுத்திகரிப்பு முறைக்கும் சரி, எங்களுக்கும் சரி எப்போதுமே இரண்டு வகைத் தண்ணீர் தேவைப்படும். ரிவர்ஸ் ஆஸ்மசிஸ் மட்டும் செய்யப்பட்ட நீரையும், முழுக்க சுத்திகரிக்கப்பட்ட நீரையும் கலந்தே குடிநீரை உற்பத்தி செய்யமுடியும்" என்றனர். இதனாலேயே குடிநீர், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவரங்களைப் பகிர்ந்துவிட்டு தங்களுடைய தொழிற்சாலையைச் சுற்றிக்காட்ட என்னை அழைத்துச் சென்றனர். அந்தக் கூடத்தை படம் அல்லது வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு விகடனின் முகநூல் பக்கத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யலாம் என்பதற்காகக் கைப்பேசியை வெளியே எடுத்ததும், "எதுக்கு சார் மொபைலெல்லாம் வெளிய எடுக்குறீங்க" என்றார். நானும் "படத்துக்காக இதை ஆர்ட் டைரக்டர்கிட்ட காட்டி செட் போடச் சொல்லணும்ல" என்றேன். ஆனால் அவர்களோ, "அதெல்லாம் வேண்டாம் சார். பிரச்னையாகிடும். வேணும்னா உங்க ஆர்ட் டைரக்டரையும் அடுத்த முறை வரும்போது கூட்டிக்கிட்டு வாங்க" எனக் கூறி என்னைப் படமோ வீடியோவோ எடுக்க கடைசிவரை அனுமதிக்கவே இல்லை.

தண்ணீர்

அதைத் தொடர்ந்து மேலும் சில சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் சென்றேன். நான் சென்ற எங்குமே என்னை வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கைப்படி, கேன்களைப் பராமரிப்பதில் கவனக் குறைவு, நிறுவனங்களின் உரிமத்தைப் புதுப்பிக்காமல் இருப்பது, கேன்களின் மூடிகளை ஒழுங்காகச் சீல் செய்யாமல் இருப்பது, குடிநீரின் பாதுகாப்பின்மைக்கான பல வகைக் காரணங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஒரு புகைப்படம்கூட எடுக்க அனுமதிக்காகத்தைப் பார்த்தால் இன்னும் சில தீவிரமான காரணங்கள்கூட இருக்கலாம் என்ற அச்சம் எழுவதையும் தடுக்க முடியவில்லை!


டிரெண்டிங் @ விகடன்