நீட் தேர்வில் வெற்றி பெற்றது 2,500 பேர்; ஆனால், 10 பேருக்கு மட்டும் சீட்! - வேதனையில் அரசுப் பள்ளி மாணவர்கள் | what happened in neet exam

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (13/06/2019)

கடைசி தொடர்பு:13:08 (13/06/2019)

நீட் தேர்வில் வெற்றி பெற்றது 2,500 பேர்; ஆனால், 10 பேருக்கு மட்டும் சீட்! - வேதனையில் அரசுப் பள்ளி மாணவர்கள்

நடந்து முடிந்த நீட் தேர்வில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,583 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 39 பேர் 400 மற்றும் 300 மதிப்பெண்களுக்கு அதிகமாகப் பெற்றுள்ளனர். இதற்காக 9 கல்வி நிறுவனங்களில் 21 நாள்கள் முழுமையாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நீட்டுக்காக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது” எனச் சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் 10 பேருக்கு மட்டுமே சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

நீட்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் மருத்துவ இடங்கள் இதுக்கப்படுகிறது.  இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டும் ஏழு அரசு மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் இணைந்துள்ளனர். அதேபோல இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் 60 சதவிகிதம் பேர் பழைய மாணவர்கள் என மருத்துவக் கல்வி இயக்குநகரம் தெரிவித்துள்ளது. இதனால் பழைய மாணவர்களுக்கே அதிக சீட் கிடைக்கும் நிலை உள்ளதால், இந்த ஆண்டு புதிதாக தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ரவீந்திரநாத்இந்தப் பிரச்னைகளை அறிந்துகொள்ளச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ``நீட் தேர்வில் அதிகபட்ச  மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கவில்லை என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த 9 முதல் 10 மாணவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. நீட் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு வருடம் முழுவதும் அதற்காகச் செலவு செய்து படிப்பதால் பழைய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்  பெறுகிறார்கள். 

கடந்த இரண்டு வருடங்களாகவே பழைய மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் மருத்துவ இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறானது. தமிழகத்தில் மொத்தமாக 3,350 மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால், அதற்காக 40,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் எப்படி சீட் வழங்க முடியும். அதேபோன்று இந்தியா முழுவதும் 60,000 மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன. அதற்குத் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் ஏழு லட்சம் பேர்” எனக் கூறிய அவர், 

தொடர்ந்து, ``தன் பிள்ளைகள் மருத்துவம்தான் படிக்க வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லை. அதைத் தாண்டி நிறைய படிப்புகள், வேலைவாய்ப்புத் துறைகள் உள்ளன. எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் வேலைவாய்ப்பு இருக்கும் நிலையை அரசும் உருவாக்க வேண்டும். ஒரு காலத்தில் பொறியியல் படிப்புக்கான மோகம் அதிகமாக இருந்தது, அனைவரும் அதை நோக்கி ஓடினர். அதன் விளைவு தற்போது யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. அதேநிலை மருத்துவ துறைக்கும் வந்துவிட்டது. அனைத்து மாணவர்களும் மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்தால் வருங்காலத்தில் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகும். தற்போதே நிறைய மருத்துவர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். 

மருத்துவ தேர்வு

இந்திய அரசும், மாநில அரசும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் உள்ளதுதான் பெரும் பிரச்னை. அதேபோல் ஊதிய விகிதங்களில் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இவற்றைப் போக்கினால் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் வேலை என்ற உத்தரவாதம் கிடைக்கும். அதேபோல், கிடைக்கும் வேலைக்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து மாணவர்களும் ஒரே துறையில் செல்ல மாட்டார்கள். ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு தற்போதைய நிலை உதவாது. அனைத்து துறைகளிலும் இணைந்து படிக்கக்கூடிய ஆர்வத்தை உருவாக்கும் வகையில் சமூக பொருளாதார பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் ஆகியவற்றை வழங்கினால் மட்டுமே இந்தப் போட்டி குறையும். 

மருத்துவர்கள்

மாணவர்கள் ஒரே துறையைத் தேர்ந்தெடுப்பதன் விளைவால், அவர்களுக்கு உரிய சீட் வழங்க முடியாமல் மாணவர்களை வடிகட்ட கொண்டுவரப்பட்டதுதான் இந்தத் தேர்வுகள். மருத்துவம் படித்தால் சொந்தமாக கிளினிக் வைத்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையிலும் நிறைய மாணவர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். இது சமூகப் பிரச்னை. முதலில் இதை மாற்ற வேண்டும். அதே சமயம் இந்தியாவில் போதுமான மருத்துவர்கள் இல்லை. வேலையில்லாமல் உள்ள மருத்துவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். நீட் தேர்வினால் அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விளக்கு அளிக்க வேண்டும்” எனக் கூறினார் நிதானமாக. 


அதிகம் படித்தவை