`3 மாதம் ஏ.சி-க்குள் குடியிருந்த பாம்பு!'- பதறிய வீட்டு ஓனர்; மீட்ட வனத்துறை | Puducherry forest department official captures a snake from AC

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (13/06/2019)

கடைசி தொடர்பு:16:16 (13/06/2019)

`3 மாதம் ஏ.சி-க்குள் குடியிருந்த பாம்பு!'- பதறிய வீட்டு ஓனர்; மீட்ட வனத்துறை

புதுச்சேரியில் ஒருவர் வீட்டில் இருந்த ஏ.சி-க்குள் சுமார் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.சி-யில் இருந்த சாரைப் பாம்பு

புதுச்சேரி தேங்காய்திட்டுப் பகுதியில் வசித்து வரும் ஏழுமலை என்பவர் சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ``ஸ்ப்ளிட்” ஏ.சியை ரிமோட் மூலம் ‘ஆன்’ செய்திருக்கிறார். அப்போது ஏ.சிக்குள் இருந்து புதுவிதமான சத்தம் கேட்டதுடன், ஒரு பக்கத்திலிருந்து மட்டும் காற்று வருவதை உணர்ந்ததும் ஏ.சி. பழுதாகிவிட்டது என்று அதை உடனே நிறுத்திவிட்டார். அதையடுத்து நேற்று காலை ஏ.சி மெக்கானிக்கை அழைத்து சரி செய்யும்படி கூறியிருக்கிறார். பழுதை சரி செய்வதற்காக ஏ.சியைக் கழற்றியபோது அதனுள் 3 பாம்பின் தோல்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது கையில் இருந்த ஸ்க்ரூ டிரைவரால் அந்தத் தோல்களை நகர்த்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த சுமார் 2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு வேகமாகச் சென்று ஏ.சியின் மற்றொரு புறத்திற்குச் சென்று ஒளிந்துவிட்டது.

ஏசியில் இருக்கும் பாம்பு

அதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஏழுமலை வனத்துறைக்குத் தகவல் அளித்தார். உடனே அங்கு சென்ற வனத்துறை ஊழியர் கண்ணதாசன் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி பாம்புக்குக் காயம் ஏற்படாமல் அதைப் பிடித்து காட்டிற்குள் விட்டார். வீட்டிற்குள் சுவரின் மேல் பொருத்தப்பட்டிருந்த ஏ.சிக்குள் எப்படி பாம்பு வந்தது என்று அனைவரும் குழம்பிய நிலையில் வனத்துறை ஊழியர்கள் அதற்கு விளக்கம் அளித்தனர். வீட்டிற்குள் இருக்கும் ஏ.சிக்கு வெளியில் இருக்கும் அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப் லைன் அமைக்க வேண்டும். அதற்கான சுவரில் துளையிடுவது வழக்கம். ஆனால் அந்தத் துளையை ஏழுமலை சரியாக அடைக்கத் தவறிவிட்டார். அதனால் வெளிப்புற யூனிட்டின் அருகிலேயே மரம் இருந்ததால், அதன் வழியாகப் பாம்பு அந்தத் துளையைக் கவனித்து அதற்குள் வந்து செட்டில் ஆகியிருக்கிறது.

பிடிப்பட்ட பாம்பு

அடிக்கடி இரை தேடுவதற்கு வெளியில் சென்று மீண்டும் அங்கேயே வந்து தங்கியிருக்கிறது. பாம்பு தோலை உரித்தால் அது வளர்ச்சி எனப்படும். 3 தோல்கள் இருப்பதைப் பார்க்கும்போது சுமார் 3 மாதங்கள் அந்தப் பாம்பு ஏ.சிக்குள் கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கிறது என்று அதிர்ச்சி கொடுத்தனர் வனத்துறை அதிகாரிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க