முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை!− ஆய்வுப் பணியைத் தொடங்கியது கேரள அரசு | Kerala begins research work near mulla periyar dam

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (13/06/2019)

கடைசி தொடர்பு:13:55 (13/06/2019)

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை!− ஆய்வுப் பணியைத் தொடங்கியது கேரள அரசு

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு தமிழகத்தின் எதிர்ப்பை மீறி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. இத்தகவலால், தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை

தேனி மாவட்டம், தமிழக –கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த நிலையில், அணை பலவீனமாக இருப்பதாகவும் எனவே இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழக அரசு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவ்வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையிடம் கேரள அரசு அனுமதி கோரியது. இதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய அணை கட்ட தீர்மானித்துள்ள இடம் பெரியாறு புலிகள் சரணாலயம் என்பதால், கேரள வனத்துறையினரிடமும் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக கேரள அரசு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. இதைப் பரிசீலனை செய்த கேரள வனத்துறையும் அணை கட்ட அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் கேரள அரசு எதிர்ப்பையும் மீறி புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக செகந்திராபாத் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தின் உதவியுடன் கேரள அரசு ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அணை கட்டும்போது கோடைக்காலம், மழைக்காலம், பனிக்காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தற்போது ஆய்வு செய்யப்படுவதாகவும் இந்த ஆய்வுப் பணிகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு கேரள நீர்ப்பாசனத்துறை மற்றும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை ஆகியவற்றிடம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை அடிப்படையில் புதிய அணை கட்ட கேரள அரசு முனைப்பு காட்டும் எனத் தெரிகிறது.