`விடுமுறை கொடுக்கல, தொடர்ந்து வேலை!'- அரசுப் பேருந்திலேயே பறிபோன ஓட்டுநரின் உயிர் | Vellore government bus driver died of heart attack

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:40 (13/06/2019)

`விடுமுறை கொடுக்கல, தொடர்ந்து வேலை!'- அரசுப் பேருந்திலேயே பறிபோன ஓட்டுநரின் உயிர்

வேலூரில் விடுமுறை வழங்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்

திருச்சி மாவட்டம், துறையூர் அழகாபுரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (45). இவர், வேலூர் கொணவட்டம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றிவந்தார். கடந்த மூன்று நாள்களாக இவர் விடுமுறை எடுக்காமல் பணியில் இருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு பெங்களூரிலிருந்து வேலூருக்குப் பேருந்தை இயக்கிவந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை தர்மராஜுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர், தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுள்ளார். பின்னர், அவரை உடனடியாகப் பணிக்கு வருமாறு அதிகாரிகள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. வேலூர்-தாம்பரம் செல்லும் பேருந்தை இயக்க டியூட்டி வழங்கியுள்ளனர். பணிமனைக்குச் சென்று பேருந்தை எடுத்துக்கொண்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
 
அப்போது, இருக்கையிலேயே திடீரென மயங்கினார். உடனடியாக அங்கிருந்த சக பேருந்து ஓட்டுநர்கள் அவரை மீட்டு ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஓட்டுநர் தர்மராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விடுமுறை வழங்காமல் தொடர் பணிசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதால் ஓட்டுநர் தர்மராஜ் உயிரிழந்துவிட்டதாக சக ஓட்டுநர்கள், அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.