`ஏதாவது நடக்கும்ன்னு எதிர்பார்க்கிறாங்க, ஆனால் எதுவும் நடக்காது!'- அமைச்சர் வேலுமணி | Minister Velumani speaks about various issues

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (13/06/2019)

கடைசி தொடர்பு:15:10 (13/06/2019)

`ஏதாவது நடக்கும்ன்னு எதிர்பார்க்கிறாங்க, ஆனால் எதுவும் நடக்காது!'- அமைச்சர் வேலுமணி

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை குறித்து அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

கோவை நிகழ்ச்சியில் வேலுமணி

கோவை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் 4-ம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு, 10.88 கோடி ரூபாய் மதிப்பில் 137 அடிக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, அந்த குடியிருப்புகளைக் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, ``சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க கூட்டம், தேர்தலுக்குப் பிறகு நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இதில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது ஏன்,  கட்சியைப் பலப்படுத்துவது, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊடகங்கள் சொல்வதைப்போல, ஒற்றைத் தலைமை குறித்தெல்லாம் ஆலோசிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர்கள்போல் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்று, கோவை மாவட்டம், சூலூர் உட்பட 9 சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற மக்கள் வாக்களித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் இது தொடரும்.

ஊடகங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சியும் கட்சிக்குள் ஏதாவது நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதுபோல எதுவும் நடக்காது. அ.தி.மு.க ஒரு பேரியக்கம் இயக்கம். தொண்டர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காவும்தான் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

வேலுமணி

மத்தியில் தண்ணீர் மேலாண்மை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றோம். அப்போது  மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அமித் ஷாவை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தோம். தமிழகத்தின் அனைத்து தேவையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் 5,000 கோடி நிதியில் தண்ணீர் விநியோகத்துக்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். தற்போது, இயற்கையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அதை எப்படி சரி செய்வது என்று திட்டமிட்டு வருகிறோம்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க வெற்றி பெற்றதை மக்கள் புரிந்துள்ளனர். அதன் முடிவு உள்ளாட்சித் தேர்தலில் தெரியும். பா.ஜ.க தமிழகத்துக்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை. தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழகத்துக்கு துரோகம் செய்யப்பட்டது. கொங்கு மண்டலம் தி.மு.க-வின் கோட்டையாக மாறிவிட்டது என ஸ்டாலின் கூறியுள்ளார். சூலூர் எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டைதான். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி குறையவில்லை. அதற்கு சூலூர் இடைத்தேர்தல் முடிவுகள்தான் உதாரணம். அ.தி.மு.க ஆட்சி நீடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்" என்றார்.