24 மணி நேரத்தில் அ.தி.மு.க தலைமை வெளியிட்ட அடுத்த அதிரடி உத்தரவு! | admk issues gag order on media

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:52 (13/06/2019)

24 மணி நேரத்தில் அ.தி.மு.க தலைமை வெளியிட்ட அடுத்த அதிரடி உத்தரவு!

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஊடகங்களிடம் அ.தி.மு.க.வினர் பேசுவதைத் தடுக்க, கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இரண்டு உத்தரவுகளை அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுவிட்டது. நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில், ``ஏதாவது பிரச்னைனா நமக்குள்ளதான் பேசித் தீர்த்துக்கணும். மீடியாகிட்ட பேசி அதை ஊதிப் பெருசாக்காதீங்க” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வெளியான அறிவிப்பில், `கட்சி குறித்தும், தேர்தல் முடிவு குறித்தும் யாரும் பொது வெளியில் பேசக் கூடாது. அடுத்த உத்தரவு வரும் வரை, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களிடம் கருத்துக் கூற வேண்டாம். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது.

அதிமுக தலைமை அலுவலகம்

இன்று காலை புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ஊடகங்களுக்காக மட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ``கழகத்தின் சார்பாகவோ, கழகத்தின் பெயரை தாங்கியோ வருபவர்களை கருத்துகளை கூற அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். அவ்வாறு மீறுகின்றபட்சத்தில், அவர்கள் கூறும் கருத்துகளுக்கு அ.தி.மு.க. பொறுப்பேற்காது. இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள் என நம்புகிறோம்” என்று எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர், ``யாரும் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதையே சிலர் வெளியே வந்தவுடன் ஊடகங்களிடம் கூறிவிட்டனர். இன்று வெளிவந்துள்ள எல்லா நாளேடுகளிலும் உள்ளே என்ன நடந்தது என்று செய்தி வெளியாகியுள்ளது. நேற்றிரவு சில தொலைக்காட்சிகளில், அ.தி.மு.க. தரப்பில் பேசுவதாக சிலர் விவாதங்களில் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ஊடகங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு அறிவிப்பு வெளியானது” என்றார்.

அதிமுக உத்தரவு

அ.தி.மு.க.வினரை ஊடகங்களிடம் பேச வேண்டாம் என உத்தரவிடுவது அக்கட்சியின் உரிமை. ஊடகங்களிடம் இவர்களை அழைக்கக் கூடாது, இவர்களை பேசவிடக் கூடாது எனக் கூற அ.தி.மு.க. தலைமைக்கு யார் அதிகாரம் அளித்தது என்பது புரியவில்லை. இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் செய்தி வெளியிட்ட பின்னர்தான் ஊடகங்கள் மீது வழக்குகள் பாயும். இப்போது செய்தி வெளியிடக் கூடாது என்றே மிரட்டல் வருகிறது.

தலைநகரம் படத்தில் வடிவேலு காமெடி ஒன்று வரும். ‘இதுக்கு மேல ஒரு அடி விழுந்துச்சு. சேகர் செத்துருவான்’ என விழுந்த அடிக்கு வலிக்காமல் வடிவேலு பேசுவார். அதே பாணியில், எங்கள் தரப்பில் யாரையாவது பேசவைத்தால் வழக்கு பாயும் என எச்சரித்துள்ளது. இதை அ.தி.மு.க.வினர் எத்தனை பேர் மதிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.