`24 கேள்விகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது!' - டி.என்.பி.எஸ்.சி-யை எச்சரித்த நீதிபதி | In Group 1 Exams, 24 out of 200 questions are wrong, Accepts TNPSC

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (13/06/2019)

கடைசி தொடர்பு:15:27 (13/06/2019)

`24 கேள்விகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது!' - டி.என்.பி.எஸ்.சி-யை எச்சரித்த நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை தமிழகத்தைச் சேர்ந்த 1,68,000 பேர் எழுதினர். இதன்பின்னர் தேர்வுக்கான மாதிரி விடைத்தாள்கள் டி.என்.பி.எஸ்.சி தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் 18 விடைகள் தவறாக இருந்ததாகப் புகார் எழுந்தது. இந்த விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது எனத் தேர்வாளர்கள் சார்பில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக் காதில் வாங்கிக்கொள்ளாத தேர்வாணையம் தேர்வு முடிவுகளைக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வாணையம் முடிவுகளை வெளியிட்டதால் தேர்வாளர்கள் ஏமாற்றமடைந்தனர். தேர்வாணையத்துக்கு எதிராக விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ``தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வானது முதல் நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறும்.இந்த தேர்வுக்கு நான் விண்ணப்பித்திருந்தேன். முதல் நிலை எழுத்துத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். இந்தத் தேர்வானது கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி  நடைபெற்றது.  

தேர்வு

தேர்வாளர்கள் ஓஎம்ஆர் தாளில் இந்தத் தேர்வினை எழுதினோம். இதற்கு அடுத்த நாளான மார்ச் 4 -ம் தேதி மாதிரி விடைத்தாள்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியானது. அதில் 10 கேள்விகள் தவறான இருப்பதாக எனக்குத் தோன்றியது. இதையடுத்து மற்ற தேர்வாளர்களுடன் கலந்தாலோசித்ததில் சுமார் 18 விடைகள் தவறாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தேர்வு  முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் மதிப்பெண் குறைந்துள்ளது. இதன்மூலம் தேர்வாளர்கள் அடுத்தகட்ட தேர்வுக்குச் செல்வது சிக்கலை ஏற்படுத்தும். தேர்வாணையம் அலட்சியமாகச் செயல்படாமல் இருக்கவேண்டும். மேலும் இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.என்.பி.எஸ்.சி தரப்பில் குருப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனத் தேர்வாணையம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. தேர்வாணையத்தின் விளக்கத்தால் அதிருப்தியடைந்த நீதிபதி பார்த்திபன், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நிறைய தவறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. போட்டித் தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்பதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 17-ம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.