`இது சரி வராதுன்னு ரெண்டு பேருகிட்டேயும் சொன்னேன்!'- ஆணவக்கொலையால் மகனை இழந்த தாய் கதறல் | Suspected honour killing in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (13/06/2019)

கடைசி தொடர்பு:16:30 (13/06/2019)

`இது சரி வராதுன்னு ரெண்டு பேருகிட்டேயும் சொன்னேன்!'- ஆணவக்கொலையால் மகனை இழந்த தாய் கதறல்

திருவையாறு அருகே காதல் பிரச்னையில் வாலிபர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `நான் இல்லேன்னா அவ செத்துருவான்னு சொன்னவனை துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டனரே'' என அந்த வாலிபரின் தாயார் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

பிரசாந்த்

திருவையாறு அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் அதே பகுதியில் உள்ள இலுப்பக்கோரை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் மீனா (பெயர் மாற்றம்) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் மீனாவின் காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்குத் தெரியவர பிரச்னை உண்டாகிறது. இதையடுத்து பிரசாந்த்-மீனா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். இதற்கிடையில் மீனாவின் அம்மா சத்யபாமா தனது பெண்ணைக் காணவில்லை என அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை பனவெளி வெண்ணாறு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சலடம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாகக் கிடப்பது பிரசாந்த் எனத் தெரியவந்தது. `என் மகனை ஏமாற்றி அழைத்து வந்து இப்படி அநியாமாகக் கொன்றுவிட்டனர்' எனப் பிரசாந்தின் அம்மா மலர்கொடி மற்றும் உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து மலர்கொடியிடம் பேசினோம். ``என் மகனும், அந்தப் பொண்ணும் காதலித்து வந்தாங்க. இது எனக்கு ஒரு மாசத்திற்கு முன்தான் தெரிஞ்சிச்சு. என் பெரிய பையன் அந்தப் பெண்ணிடம் உனக்கு 17 வயசுதான் ஆகுது. அதனால் நீ என் தம்பியைக் கல்யாணம் செய்ய முடியாது. உன் வீட்டில் உன்னைக் கொன்று விடுவார்கள். படிக்கிற வேலையைப் பார். நமக்கு ஒத்து வராது எனச் சொன்னான். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கும் தெரிய வந்ததையடுத்து பிரச்னை பெரிதானது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை மீனா அவங்க வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு வந்துவிட்டாள். நாங்க பதறிப் போய் உங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சா பெரிய சண்டை ஆகிவிடும். நீ உடனே போம்மா எனச் சொன்னேன். அதற்கு அவள், பிரசாந்த் இல்லாமல் நான் போகமாட்டேன். அவனோடுதான் வாழ்வேன், இல்லையென்றால் செத்துடுவேன் என அழுதது. பின்னர் என் மகன் பிரசாந்த் அவளை கூட்டிக்கொண்டு கும்பகோணம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டான்.

ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரசாந்த்

இதையடுத்து பெண்ணைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். எங்க வீட்டுக்கு வந்து பெண்ணோட அப்பா முருகன் மற்றும் உறவினர்கள் என் பொண்ணையா தூக்கிகிட்டு ஓடினீங்க. உன் பொண்ணையும் தூக்குறேன் பார் என அரிவாள் மற்றும் கம்புடன் வந்து மிரட்டினார். பயந்து போன நாங்கள் அனைவரும் திருப்பூருக்குக் கிளம்பிவிட்டோம். இதற்கிடையில் என் மகனும் அந்தப் பொண்ணும் தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டுவிட்டதாக தெரிகிறது. அப்புறம் நான் என் மகனிடம் தம்பி அந்தப் புள்ளையோட அப்பா வந்து மிரட்டிட்டிப் போனாரு. யாரோட உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. நாங்க வெளியூருக்குப் போகப்போறோம். நீங்களும் வந்து விடுங்கள் எனச் சொன்னேன். அவர்களும் வந்தார்கள். எல்லோரும் ஜெயங்கொண்டத்திலிருந்து திருப்பூருக்கு செல்ல இருந்தோம். அப்போ என் மகன் நீங்க முதல்ல போங்க, நான் அடுத்த பஸ்ல வரேன் எனச் சொன்னான். சரி வாப்பான்னு சொல்லிவிட்டு நாங்க கிளம்பினோம். அவன் அவனுடைய சிநேகிதகாரன் ஒருவனுக்கு போன் செஞ்சி விஷயத்தைச் சொல்லிவிட்டு சமயபுரம் வந்துவிட்டான்.

அதன்பிறகு பலர் என் மகனை மிரட்டியிருக்காங்க பொண்ணோட அம்மா, மீனாவிடம் நைஸாகப் பேசி எங்க இருக்கீங்க என இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டார். பின்னர் 9 பேர் கார் மூலம் வந்து நாங்களே எல்லாம் நல்லவிதமாக செய்து வைக்கிறோம் என ஆசை வார்த்தை கூறி என் மகனையும், அந்தப் பொண்ணையும் சமயபுரத்திலிருந்து அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அப்போதே அந்தப் பொண்ணு  பிரசாந்த்தை எதுவும் பண்ணக் கூடாது எனச் சொன்னதற்கு சரி என்றுள்ளனர். பிறகு வரும் வழியில் மீனாவை உறவினர் வீட்டில் இறக்கிவிட்டு என் மகனையும் மட்டும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அப்போதும் பிரசாந்த்தை அவங்க அம்மாவிடம் விட்டு விடுங்க எனச் சொல்லியிருக்கிறது. ஆனால் பாவிகள் நேராக ஆற்று கரைக்குக்கொண்டு போய் துண்டால் வாயைக் கட்டியுள்ளனர். பின்னர் அவன் சட்டையைக் கொண்டே அவன் கைகளை பின்பக்கமாகக் கட்டியுள்ளனர். முகம் முழுவதும் பிளேடால் கீறப்பட்ட காயம் இருக்கு. கட்டையைக் கொண்டு தலையில் மட்டுமே அடித்து துடிக்கக் துடிக்க கொன்றுள்ளனர்.

பிரசாந்த்தின் தாயார் மலர்கொடி

ரெண்டு பேருகிட்டேயும் அப்பவே சொன்னேன் இது சரி வராது. கொன்று விடுவார்கள் என்று. அதற்கு மீனா, `நாங்க செத்தா ஒண்ணாவே சாகுறோம்' எனச் சொன்னுச்சி. என் மகன், `நா இல்லேன்னா அவ செத்துருவாம்மான்னு சொன்னான்'. எந்த உயிரும் போகக்கூடாது என்றுதான் நான் அமைதியாக இருந்தேன். இப்படி என் புள்ளை உசுரு பறி போச்சே என அழுது கொண்டே சொன்னார். இந்தக் கொலை தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்னும் மூன்று பேரை கைது செய்யவில்லை எனப் புகார் கூறுகிறார்கள் உறவினர்கள். மற்ற மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்றதோடு, `பிரசாந்த் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. போலீஸ் இந்த வழக்கில் ஆரம்பம் முதலே முருகனுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அதனால் இன்று ஒரு உயிர் போயிருக்கிறது. இனிமேலாவது ஒழுங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர் உறவினர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க