`அவர் இருக்காருனு சொல்றாங்க... எங்கேனுதான் தெரியல!' - முகிலன் குறித்து நல்லகண்ணு வேதனை! | Nallakannu worried about social activist mugilan missing

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/06/2019)

கடைசி தொடர்பு:21:00 (13/06/2019)

`அவர் இருக்காருனு சொல்றாங்க... எங்கேனுதான் தெரியல!' - முகிலன் குறித்து நல்லகண்ணு வேதனை!

''கூடங்குளம் அணுஉலைக் கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது என்பதால், அதைக் கைவிட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு கருத்துச் சொல்லக்கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுப்பது தவறானது'' என்று நல்லகண்ணு தெரிவித்தார்.

நல்லகண்ணு


நாகர்கோவிலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது, காவிரி ஆணையத்திற்கு எதிரானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே மரபு வழியாக இரு மாநிலங்களும் ஒத்துக்கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டும் என உள்ளது. ஆணையம் என்று வந்த பிறகு, கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் எனக் கூறுவது தவறு. அதற்கு, மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது தமிழகத்திற்குச் செய்யும் துரோகம். இதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் போராட வேண்டும். ஜூன் மாதம் 12-ம் தேதி, தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், இதைப் பற்றிப் பேசாமல் மௌனம் சாதிக்கிறார்கள். 

நல்லகண்ணு

கூடங்குளம் அணுஉலைக் கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது என்பதால், அதைக் கைவிட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு கருத்துச் சொல்லக்கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுப்பது தவறானது. மாநில அரசு நீண்ட கால திட்டமிடுதல் இல்லாததால்தான், தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. முகிலன் காணாமல் போய் 100 நாள்களைக் கடந்துவிட்டது. அவர் இருக்கிறார் எனக் கூறுகிறார்கள், ஆனால், எங்கே என்பதுதான் தெரியவில்லை. அவரை மீண்டும் உயிரோடு கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.