‘கல்குவாரி தண்ணீர் விஷத்துக்கு சமம்; அதை விநியோகிக்கிறார்கள்!’ -துரைமுருகன் குற்றச்சாட்டு | Duraimurugan allegation on tn government

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (13/06/2019)

கடைசி தொடர்பு:22:00 (13/06/2019)

‘கல்குவாரி தண்ணீர் விஷத்துக்கு சமம்; அதை விநியோகிக்கிறார்கள்!’ -துரைமுருகன் குற்றச்சாட்டு

‘‘கல்குவாரிகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர் விஷத்துக்கு இணையானவை. அந்தத் தண்ணீரை விநியோகம் செய்கிறார்கள். 8 ஆண்டுகளில் ஒரு சொட்டுத் தண்ணீருக்காகக்கூட புதிய திட்டத்தை இந்த ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை’’ என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடுமையாகச் சாடினார்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் காத்தவராயன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ அலுவலகம் திறப்புவிழா இன்று நடைபெற்றது. தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க-வினரும் அமைச்சர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் நிலைகுலைந்துபோயிருக்கிறார்கள். நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நிறையத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குடிநீர் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. 

இந்த நிலையில், ஏலகிரி கோடை விழாவையும் அவர்கள் நடத்தவில்லை. குடிநீர் பிரச்னை சம்பந்தமாக சட்டமன்றத்தைக் கூட்டுமாறு ஸ்டாலின் சொன்னார். ஆளும்கட்சி தரப்பில், இதுவரை அதற்குப் பதில் இல்லை.சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் எல்லாம் வறண்டு போய்விட்டன. 1983-ல் இதேபோன்று கடும் வறட்சி ஏற்பட்டபோது, அப்போதைய ஆட்சியாளர்கள் ஈரோடு, திருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவந்தனர். அதேபோல் கொண்டுவரலாம். அதற்குக் கட்டணமில்லை. ஆனால், இவர்கள் கல்குவாரிகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரைக் கொண்டுவந்து விநியோகம் செய்கிறார்கள். மனிதர்களும் விலங்குகளும் உயிரிழக்கக்கூடிய, பல ஆண்டுகளாக அசுத்தமாக இருக்கும் விஷத்துக்கு ஈடான கல்குவாரி தண்ணீரைக் கொடுக்கிறார்கள். 

ஆந்திராவிடம் பேசி தண்ணீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் எதுவுமே செய்யவில்லை. உள்ளாட்சியில் இருக்கும் நிதியை வைத்து குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறு அமைக்கச் சொன்னோம். ஆனால், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்காமல் குப்பைத் தொட்டியை வைக்கிறார்கள். 8 ஆண்டுகளில் ஒரு சொட்டுத் தண்ணீருக்காகக் கூட புதிய திட்டங்களை அ.தி.மு.க அரசு கொண்டுவரவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க அமோக வெற்றிபெறும்’’ என்றார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள் கார்த்திகேயன், நந்தகுமார், காந்தி, காத்தவராயன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.