பட்டியலினப் பெண்களின் இடமாற்ற உத்தரவு ரத்து - அங்கன்வாடி தீண்டாமை விவகாரத்தில் நோட்டீஸ்! | caste discrimination in near Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (13/06/2019)

கடைசி தொடர்பு:20:24 (13/06/2019)

பட்டியலினப் பெண்களின் இடமாற்ற உத்தரவு ரத்து - அங்கன்வாடி தீண்டாமை விவகாரத்தில் நோட்டீஸ்!

மதுரை திருமங்கலத்தை அடுத்த எஸ்.வலையபட்டி கிராமத்தில், இரு சமூகத்தினருக்கு இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி, மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் வலையபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, கடந்த 4-ம் தேதி இருவரும் பணியில் சேர்ந்துள்ளனர். இருவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் மற்றொரு சமூகத்தினர், இருவரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 

தீண்டாமை

அவ்வாறு மாற்றவில்லை என்றால், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மாட்டோம் எனத் தெரிவித்திருந்தனர். இந்த விஷயம் கிராமத்தில் பிரச்னையாக உருவெடுத்தது. இதனால் அதிகாரிகள், இருவரையும் தற்காலிகமாக அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியமர்த்தினர். கிராமத்தில் ஏற்பட்ட மோதலால், கிராமத்தில் இருந்த ஒரு சமூகத்தினர் பலர் கைது நடவடிக்கைக்குப் பயந்து ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் யாரும் வரவில்லை. 

இதனால், வலையபட்டியில் தற்காலிகமாகப்  பணியாற்றும் ஊழியர், தினமும் சமைக்கும் உணவு வீணாவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், அங்கன்வாடி மாற்றப்பட்ட விவகாரத்தில், விசாரணை செய்வதற்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் மலர்விழி, வலையபட்டி அங்கன்வாடி மையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

 

தீண்டாமை  

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நெருக்கடிகளுக்குப் பணிந்து அங்கன்வாடிப் பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகளுக்கு இடையே, பட்டியலினத்தைச் சேர்ந்த 2 ஊழியர்களின் பணியிடமாற்ற உத்தரவை ரத்துசெய்து, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.