`ஆயிரம் ஆண்டுகள் கழித்து இதைப் பேசவேண்டிய அவசியம் என்ன?’- பா.இரஞ்சித்துக்கு நீதிமன்றம் கேள்வி | madurai high court questioned to pa.ranjith

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (13/06/2019)

கடைசி தொடர்பு:12:03 (14/06/2019)

`ஆயிரம் ஆண்டுகள் கழித்து இதைப் பேசவேண்டிய அவசியம் என்ன?’- பா.இரஞ்சித்துக்கு நீதிமன்றம் கேள்வி

சர்ச்சைக்குரிய கருத்துகளைப்  பேசியது தொடர்பான வழக்கில் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித்


ராஜராஜ சோழன் குறித்து பா.இரஞ்சித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக,  தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர்,  ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், முன் ஜாமீன் கோரி  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பா.இரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார்.  இந்நிலையில், இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி இராஜமாணிக்கம் விசாரணை செய்தார். மனுதாரர் தரப்பில், "தான் பேசியது மட்டும் தவறான நோக்கில் சித்திரிக்கப்படுகிறது. தான் அறிந்த வரலாறுகளையே பேசினேன். இது, எந்த சமூகப் பிரச்னையையும் ஏற்படுத்தாது” என்று தெரிவிக்கப்பட்டது. 

அதற்கு நீதிபதி, ``ஆயிரம் ஆண்டுகள் கழித்து இதுகுறித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன? மனுதாரர் தேவதாசி முறை குறித்துப் பேசியுள்ளார். தேவதாசி முறை பல  பெரும் தலைவர்களின் முயற்சியால் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதேபோல, மனுதாரர் நிலம் கையகப்படுத்துதல் குறித்தும் பேசியுள்ளார். இன்றும் அரசு, மக்களின் நிலங்களை கையகப்படுத்தி, அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறிருக்கையில், ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்கு பல விசயங்கள் இருக்கையில், மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, அரசுத் தரப்பில் பா.இரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 19-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்குமாறு இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவரை திருப்பனந்தாளில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பா.இரஞ்சித்தை கைதுசெய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இது தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யச் செய்துள்ளார். வழக்கை  ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.