`அங்கிளைப் பார்க்காமல் போக மாட்டேன்...' - அடம்பிடித்த குழந்தையால் உருகிய செந்தில் பாலாஜி! | Senthil Balaji met baby girl who want to meet him

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (13/06/2019)

கடைசி தொடர்பு:21:40 (13/06/2019)

`அங்கிளைப் பார்க்காமல் போக மாட்டேன்...' - அடம்பிடித்த குழந்தையால் உருகிய செந்தில் பாலாஜி!

பள்ளபட்டி பகுதிக்கு நன்றி சொல்லச் சென்ற தன்னை, 'பார்த்தே தீருவது' என்று அடம்பிடித்த நான்கு வயது குழந்தையால் நெகிழ்ந்தார், செந்தில் பாலாஜி.

குழந்தை ஹாபிலா பாத்திமா

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார். அதேபோல், தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் களம்கண்ட ஜோதிமணியும் வெற்றிவாகை சூடினார். இவர்கள் இருவரின் வெற்றிக்கும் முக்கியக் காரணியாக இருந்தது, பள்ளபட்டியில் உள்ள 29,000 இஸ்லாமிய வாக்குகள்தாம். அதனால், தங்களை வெற்றிபெறவைத்த பள்ளபட்டி இஸ்லாமிய மக்களுக்கு, செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் நன்றி தெரிவிக்கச் சென்றனர். பள்ளபட்டி பேரூராட்சியில் மட்டும் ஒருநாள் ஒதுக்கி, 24 இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

ஹாபிலா பாத்திமா செந்தில் பாலாஜியோடு...

இந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி,  "ஆளுங்கட்சியினர் எவ்வளவோ வதந்திகளைப் பரப்பியும், அதை துளியும் காதுகொடுத்துக் கேட்காமல், 'பள்ளபட்டி தி.மு.க கோட்டை' என்பதை மறுபடியும் நிரூபித்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. எங்கள் உயிர் இப்போதே, இங்கேயே போனாலும் சந்தோஷப்படுவோம்" என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். மாலை  4  மணி தொடங்கி இரவு  9 மணிவரை இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில்தான், பள்ளபட்டி ஷாநகர் கார்னர் பகுதியில்  4 வயது நிரம்பிய ஹாபிலா பாத்திமா என்ற சிறுமியோடு, மிகுந்த எதிர்பார்ப்பில் நின்றிருந்தார். அந்தக் குழந்தையின் பெரியப்பாவான நிஜாம் அலி, சிறிதுநேரத்தில் ஹாபிலா பாத்திமாவை வீட்டுக்கு அழைக்க, மறுத்த அந்த குழந்தை, "செந்தில் பாலாஜி அங்கிளைப் பார்க்காம வீட்டுக்கு வரமாட்டேன்" என்று அடம்பிடித்தது. இதை காதில் வாங்கிய அருகில் நின்றிருந்த தி.மு.க-வினர் சிலர், ஆச்சர்யத்தோடு அவர்களிடம் விசாரித்தனர். 

ஹாபிலா பாத்திமா செந்தில் பாலாஜியோடு....

செந்தில் பாலாஜி, தேர்தலுக்கு முன்பு வாக்கு கேட்டு அங்கு சென்றபோது, ஹாபிலா பாத்திமாவின் தந்தை ஜாபர் சாதிக் அலி, செந்தில் பாலாஜியோடு ஹாபிலா பாத்திமாவை நிற்கவைத்து போட்டோ எடுத்திருக்கிறார். அதன்பிறகு, அதை அவர் மறந்துவிட, 'செந்தில் பாலாஜி நன்றி சொல்ல வருகிறார்' என்ற தகவல் கேட்டதும், 'செந்தில் பாலாஜி அங்கிளைப் பார்க்கணும்' என்று அடம்பிடித்த ஹாபிலா பாத்திமா, தனது பெரியப்பா நிஜார் அலியோடு வந்திருக்கிறார். இதனால் ஆர்வமான தி.மு.க-வினர், ஹாபிலா பாத்திமாவை நான்கைந்து பாயின்டுகளில் செந்தில் பாலாஜியிடம் அறிமுகப்படுத்த முயன்றார்கள். முடியவில்லை. இறுதியாக, நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி முடிந்து பள்ளபட்டி காங்கிரஸ் முக்கியப் புள்ளி ஒருவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க அவரது வீட்டுக்கு செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் சென்றனர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க-வினர், ஹாபிலா பாத்திமாவை செந்தில் பாலாஜியிடம் அறிமுகப்படுத்தினர். 

தன்னைப் பார்க்க இத்தனை ஆர்வத்தோடு இருக்கும் அந்தக் குழந்தையைப் பார்த்து ஆச்சர்யமான செந்தில் பாலாஜி, அவரை தூக்கி வைத்துக்கொண்டார். அவருக்கு இனிப்பு கொடுத்ததோடு, "என்ன படிக்கிறாய்?" என்று கேட்டார். "யூ.கே.ஜி அங்கிள்" என்றது அந்தக் குழந்தை. "என்னை உனக்கு புடிக்குமா?" என்று செந்தில் பாலாஜி கேட்க, "ஆமாம், புடிக்கும்" என்றார் ஹாபிலா பாத்திமா. "நல்லா படிக்கணும். நான் பள்ளபட்டி வரும்போதெல்லாம் உன் வீட்டுக்கு நானே வந்து பார்க்கிறேன், சரியா?" என்று சொன்னதோடு, ஹாபிலா பாத்திமாவோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார். 

நிஜார் அலி

அதுவரை, தொடர் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியால் களைத்துப்போயிருந்த செந்தில் பாலாஜி, தன்னைப் பார்க்க இவ்வளவு நேரம் காத்திருந்த ஹாபிலா பாத்திமாவால் நெகிழ்ச்சிக்கு ஆட்பட்டதோடு, உற்சாக மூடுக்கு மாறினார். நம்மிடம் பேசிய ஹாபிலா பாத்திமாவின் பெரியப்பாவான நிஜார் அலி, "எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு. ஜோதிமணி பெயரைக்கூட இவளுக்கு நினைவில்லை. ஆனா, செந்தில் பாலாஜி இங்க வர்றார்ன்னதும், 'செந்தில் பாலாஜி அங்கிளைப் பார்க்கணும்'னு அடம்பிடிச்சு, என்னை கூட்டிட்டுப் போ'ன்னா. நாலைஞ்சு பாயின்டுகளில் அவரைப் பார்க்க முயற்சி பண்ணினேன். முடியலை. அதனால், 'நேரம் ஆயிட்டு, வீட்டுக்கு போகலாம்'னு வீட்டுக்கு கூப்பிட்டேன். ஆனா, வரமறுத்துட்டா. நல்லவேளையா தி.மு.க-வினர் சிலர், எங்களை அழைச்சுட்டுபோய், செந்தில் பாலாஜியை பார்க்க வச்சாங்க" என்றார்.