இப்படியும் பரிசு கொடுக்கலாம்... பிறந்த நாளில் இளைஞரை நெகிழவைத்த நண்பர்கள்! | young man gave banana tree for friend's birthday gift

வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (14/06/2019)

கடைசி தொடர்பு:08:01 (14/06/2019)

இப்படியும் பரிசு கொடுக்கலாம்... பிறந்த நாளில் இளைஞரை நெகிழவைத்த நண்பர்கள்!

கரூரில் இளைஞர் ஒருவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பரிசாக வித்தியாசமான கிஃப்ட்டை நண்பர் ஒருவர் வழங்க, பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் நெகிழ்ந்துபோனார்.

மாயபெருமாள்

கரூரைச் சேர்ந்தவர் மாயபெருமாள். சமூக ஆர்வலரான இவர், நண்பர்களோடு சேர்ந்து இளையதலைமுறை என்ற சமூக விழிப்புணர்வை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் ரத்ததானம் செய்வது, நெகிழியை ஒழிப்பது, நீர்நிலைகளைத் தூர்வாருவது என்று சமூக நோக்குள்ளப் பணிகளைச் செய்துவருகிறார். இதேபோல், வறட்சிமிகுந்த மாவட்டமான கரூரை பசுமையாக்கும் காரியத்திலும் இவர் இறங்கி இருக்கிறார். மாவட்டம் முழுக்க 10,00,000 மரக்கன்றுகளை நடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். முதல்கட்டமாக, அதற்காக நர்சரி ஆரம்பித்து, மூவாயிரம் மரக்கன்றுகள் வரை தயார் செய்து வைத்திருக்கிறார்.

மாயபெருமாளுக்கு பரிசு வழங்கும் பாலசுந்தர்

இந்த நிலையில், இவர் தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். வழக்கமாகக் கடந்த பத்து வருடங்களாகத் தனது பிறந்தநாளின்போது, தனது வயது எண்ணிக்கையில் மரக்கன்றுகளை அரசுப்பள்ளிகளின் வளாகங்களில் நட்டு, தனது பிறந்தாளை கொண்டாடுவார். ஆனால், இந்த வருடம் தனது நர்சரியில் ராமாபானம், அகத்தி, பிரண்டை, திருநீற்றுப்பச்சலை, அகத்தி, துளசி உள்ளிட்ட 14 வகையான மூலிகைச்செடிகளை நட்டு, பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்தச் சூழலில்தான், அவரது நண்பரான பாலசுந்தர் என்பவர், சர்ப்ரைஸாக இரண்டு கற்பூரவல்லி வாழை மரக்கன்றுகளை பிறந்தநாள் பரிசாக மாயபெருமாளுக்குத் தர, அந்த பரிசைப் பார்த்து நெகிழ்ந்துபோனார். நண்பர் வழங்கிய பரிசை கையோடு தனது நர்சரியில் நடவும் செய்தார். அதோடு, இத்தகைய பரிசை தந்த தன் நண்பர் பாலசுந்தருக்கு, நெஞ்சார நன்றி தெரிவித்தார் மாயபெருமாள். 

கற்பூரவள்ளி வாழைக்கன்றுகளை மாயபெருமாள் நட்டபோது...

மாயபெருமாளிடமே பேசினோம்... ``கடந்த பத்து வருஷமா இயற்கை, மரங்கள், காடுகள்னு பேசியும், செயல்பட்டும் வர்றதால, மரக்கன்றுகளை யாராவது கொடுத்தா, கோடி ரூபாய் கொடுத்தாப்புல அவ்வளவு சந்தோஷமாயிடுது. அப்படி இருக்கையில், எனது பிறந்தநாள் பரிசாக எனது நண்பர் இரண்டு கற்பூரவல்லி வாழைமரக் கன்றுகளை வழங்கவும், என்பேர்ல அவர் தனது சொத்தையே எழுதிவச்சாப்புல மகிழ்ச்சியா இருந்துச்சு. பாலசுந்தர் ஆறுமாசமாதான் எனக்குப் பழக்கம். தனியார் வங்கியில் வேலைபார்க்கும் அவர், எங்க அமைப்போட செயல்பாடுகளைப் பத்தி கேள்விப்பட்டு, கடந்த ஆறு மாசங்களுக்கு முன்பு எங்க அமைப்புல சேர்ந்தார். அதன்பிறகு, எனக்குத் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பராக நெருக்கமாகிவிட்டார். அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு பரிசு கிடைச்சதும் உண்மையில் நெகிழ்ந்துபோயிட்டேன். எனது இத்தனை வருட பிறந்த நாள்களில் செயின், மோதிரம், பணம், வாட்ச், உடைனு எவ்வளவோ பரிசுகள் கிடைச்சிருக்கு. ஆனா, அத்தனை பரிசுகளையும்விட, பாலசுந்தர் கொடுத்த பரிசுதான் பலமடங்கு உசத்தியானது. அந்த இரண்டு கன்றுகளையும் கண்இமைபோல கவனிச்சு வளர்ப்பேன். பாலசுந்தர் பாணியை பயன்படுத்தி, நானும் இனிமேல் மத்தவங்களுக்கு பிறந்தநாள் பரிசா, மரக்கன்றுகளை வழங்கலாம்னு இருக்கேன்" என்றார் உற்சாகமாக!

நல்ல ஐடியா தான் நாமளும் இதைப் பின்பற்றலாமே!