`ஐ.எஸ். பயங்கரவாதிகளோடு தொடர்பு?' - கோவையில் மேலும் மூன்று நபர்களிடம் அதிரடி விசாரணை! | kovai police raid in who touch with isis

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (14/06/2019)

கடைசி தொடர்பு:08:30 (14/06/2019)

`ஐ.எஸ். பயங்கரவாதிகளோடு தொடர்பு?' - கோவையில் மேலும் மூன்று நபர்களிடம் அதிரடி விசாரணை!

ஐ எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சார்பில் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித் திட்டம் தீட்டியதாக கோவையில் மேலும் மூன்று நபர்கள் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உ.பா சட்டம்) வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் நேற்று முன்தினம் ஆறு பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள், அந்த ஆறு நபர்களும் இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருந்ததாகவும் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும் கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில், முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் உக்கடத்தைச் சேர்ந்த அசாருதீன் என்பவரை மட்டும் கைது செய்து கொச்சின் அழைத்துச் சென்றனர். 

இந்த நிலையில், என்.ஐ.ஏ சோதனையின் தொடர்ச்சியாக கோவையில் மூன்று இடங்களில் கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினரும், மாநகர காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில், உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் கறுப்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லாஹ் ஆகியோரது வீட்டில், நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின்னர், அந்த மூன்று நபர்களையும் காவல் பயிற்சி மையத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மூன்று நபர்களும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்குக் கோவையில் அடித்தளம் அமைத்து,  தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், இலங்கையில் குண்டுவெடிப்பு நடத்திய ஜாஹ்ரான் ஹாசிமின் செயல்களை இவர்கள் புகழ்ந்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இவர்கள் மூன்று பேர் மீதும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் மொபைல் போன், சிம்கார்டுகள், கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தொடந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க