கரன்ட் ஷாக்.... மாரடைப்பு? - முதுமலையில் பெண் யானை இறப்பில் மர்மம்! | Forest department conducts investigation to elephant’s death

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:10:00 (14/06/2019)

கரன்ட் ஷாக்.... மாரடைப்பு? - முதுமலையில் பெண் யானை இறப்பில் மர்மம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மாரடைப்பால் 30 வயது பெண் யானை இறந்ததாக வனத்துறை கூறி வரும் நிலையில், மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

யானை

 

688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில், புலிகள் காப்பக உள் மண்டலமான முதுமலை வனச் சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்டமூலா வனப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை 30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்றுபார்த்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் யானை, திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், யானை மாரடைப்பால் இறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில் ``நல்ல உடல் நலத்துடன் உள்ள காட்டு யானைகள் திடீரென மாரடைப்பால் இறப்பதற்கு வாய்ப்பில்லை. பிறக்கும்போதே குறைபாடுகளுடன் பிறக்கும் யானைகள்தான் உடல்நல பாதிப்புக்குள்ளாகி இறக்க வாய்ப்புள்ளது. இறந்திருக்கும் இந்தப் பெண் யானை 30 வயது நிரம்பிய நல்ல ஆரோக்கியமான யானையாக இருந்துள்ளது. அப்படி இருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிகக் குறைவு. மேலும், இறந்த யானையின் வாயில் காயம் உள்ளது. இதனால் மேய்ச்சலுக்குச் சென்ற அந்தக் காட்டு யானை மின்வேலிக் கம்பியை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

யானை

யானை இறப்பு குறித்து வனத்துறையினர் கூறுகையில், ``யானை இறந்துகிடந்த இடத்தின் அருகில் விளை நிலம் உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் மின் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. விளைநிலத்தில் இருந்த பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யானை இறக்கும் அளவுக்கு மின்சாரம் பாய்ந்திருக்குமா எனச் சோதனை மேற்கொண்டு வருகிறோம். எனவே, இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், ``வனத்துறையினர் மாரடைப்பால் யானை இறந்ததாகக் கூறுகின்றனர். அப்படி இறந்திருக்க வாய்ப்பே இல்லை. மேலும், யானையின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்க வாய்ப்பு அதிகம். வன விலங்குகளின் மிகவும் பாதுகாப்பான பகுதியான முதுமலைப் பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது மிக மோசமானது. எனவே, முறையான விசாரணை மேற்கொண்டு தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்.