`இங்கு தண்ணீர் இல்லை; வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்! - மிரட்டும் பஞ்சத்தால் ஐ.டி நிறுவனங்கள் அதிரடி | Some It Companies in Chennai told their Employees work from Home to avoid water problem

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (14/06/2019)

கடைசி தொடர்பு:10:30 (14/06/2019)

`இங்கு தண்ணீர் இல்லை; வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்! - மிரட்டும் பஞ்சத்தால் ஐ.டி நிறுவனங்கள் அதிரடி

தமிழகம் முழுக்கவே தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பல கிராமங்களில் மழை பெய்யாத நிலையில், விவசாயம் செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர் மக்கள். தண்ணீருக்காகப் பல கிலோ மீட்டர் பயணித்து தாகத்தை தீர்த்துக்கொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையிலும் வழக்கமான கோடைக்காலம்போல தண்ணீர் பஞ்சம் தொடங்கியுள்ளது. இதன் விளைவாகச் சென்னை ஓ.எம் ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர்

 

 

தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தியுள்ளன சில நிறுவனங்கள். கிட்டதட்ட 12 கம்பெனிகளில் பணிபுரியும் 5,000 ஊழியர்களை இதைப்போல அறிவுறுத்தி உள்ளது. தரமணி தொடங்கி சிறுசேரி வரையிலும் பல நூறு ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேல் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். சென்னையில் மழை பெய்து 200 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், எப்படி நீரைச் சேமிப்பது என பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறதாம். சில ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் நடத்தியபோதும் இதேபோல ஊழியர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரியச் சொல்லியது பல ஐ.டி நிறுவனங்கள்.